முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுகொலை 5 பேர் கைது
மயிலாடுதுறையில் முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
குத்தாலம்,
மயிலாடுதுறையில் முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோதம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மணக்குடி செட்டித்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் முத்தழகன் (வயது 23). இவரது சகோதரர் கட்டபொம்மனுக்கும், மயிலாடுதுறை பாலாஜி நகர் பசுபதி கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (28) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
கடந்த 16-ந்தேதி மயிலாடுதுறை பாலாஜி நகரில் கட்டபொம்மனுக்கும், சுரேசுக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது கட்டபொம்மனின் மோட்டார் சைக்கிளை சுரேஷ், அவரது நண்பர்கள் சசிகுமார், முத்துப்பாண்டி, மணிகண்டன், கீர்த்திதரன் ஆகியோர் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
வாலிபர் படுகொலை
அந்த மோட்டார் சைக்கிளை திருப்பி கேட்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு முத்தழகன், அவரது சகோதரர் கட்டபொம்மன், நண்பர் மயிலாடுதுறை தருமபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிவராஜ் (19) ஆகியோரை அழைத்து கொண்டு மயிலாடுதுறை பாலாஜி நகருக்கு சென்றுள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து முத்தழகன், சிவராஜ் ஆகியோரை கத்தி, இரும்பு பைப் மற்றும் உருட்டு கட்டைகளால் சரமாரியாக தாக்கினர். அப்போது சுதாரித்து கொண்ட கட்டபொம்மன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த முத்தழகன், சிவராஜ் ஆகிய 2 பேரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவராஜ் பரிதாபமாக இறந்தார். முத்தழகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
5 பேர் கைது
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், கீழநாஞ்சில் நாடு மெயின்ரோட்டை சேர்ந்த சசிகுமார் (21), மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் ரோடு மயிலம் நகரை சேர்ந்த முத்துப்பாண்டி (19), கணபதி நகரை சேர்ந்த மணிகண்டன் (22), தருமபுரத்தை சேர்ந்த கீர்த்திதரன் (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். கொலைசெய்யப்பட்ட சிவராஜ் ஆந்திராவில் சிற்ப தொழில் பார்த்து வந்தவர். ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ஆந்திராவில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story