திண்டுக்கல் மாவட்டத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின சிறப்பு பஸ்களில் சென்றனர்
திண்டுக்கல் மாவட்டத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின. அவர்கள் சிறப்பு பஸ்களில் பணிக்கு சென்றனர்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை, போலீஸ், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் பலர் விடுப்பு எடுக்காமல் வேலைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் ரெயில்கள், பஸ்கள், வாடகை வாகனங்கள், ஆட்டோக்கள் கூட ஊரடங்கால் இயக்கப்படவில்லை.
இதனால் மேற்கண்ட 4 துறைகளை தவிர பிற துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பலர் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் சுழற்சி முறையில் இயங்கலாம் என்றும், வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்களாக கடைபிடிக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.
இதையடுத்து நேற்று அனைத்துத்துறை அரசு அலுவலகங்களுக்கும் ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அதில் பலருக்கு பணி நாட்கள் ஒதுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் இனிவரும் நாட்களில் 50 சதவீத ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்பட உள்ளது. அரசு ஊழியர்கள் பணிக்கு வந்ததால், அரசு அலுவலகங்கள் மீண்டும் புத்துணர்வுடன் செயல்பட தொடங்கின.
பஸ்கள் இயக்கம்
மேலும் அரசு ஊழியர்கள் பணிக்கு வந்து செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கவும் அரசு உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, வேடசந்தூர் ஆகிய 6 இடங்களில் இருந்து 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தலா 25 பேர் மட்டுமே அனுமதிக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
ஆனால், பெரும்பாலான பஸ்கள் ஒன்றிரண்டு ஊழியர்களுடன் தான் சென்றன. பல ஊழியர்கள் சொந்த வாகனங்களில் சென்று விட்டனர். மேலும் அடையாள அட்டை வைத்துள்ள அரசு ஊழியர்கள் மட்டுமே பஸ்களில் ஏற்றப்பட்டனர். அதேநேரம் பொதுமக்கள் பஸ்களில் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
Related Tags :
Next Story