50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின


50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின
x
தினத்தந்தி 19 May 2020 5:42 AM IST (Updated: 19 May 2020 5:42 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின.

கிருஷ்ணகிரி,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. இருப்பினும் ஒரு சில முக்கிய அலுவலகங்கள் மட்டும் சில அரசு ஊழியர்களை கொண்டு இயங்கி வந்தது. இந்த நிலையில் ஊரடங்கில் உள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்கள் அனைத்தும் 50 சதவீத பணியாளர்களுடன் 18-ந் தேதி முதல் இயங்கும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி அரசு அலுவலகங்கள் நேற்று முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் நேற்று 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க தொடங்கியது. ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்தவாறு பணிக்கு வந்தார்கள். அலுவலக வளாகத்தில் சானிடைசர்கள் கொண்டு கைகளை கழுவிக் கொண்டு பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டனர்.

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் பல்வேறு அலுவலகங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் நேற்று செயல்பட்டன. அலுவலர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசங்கள் அணிந்தும் பணியில் ஈடுபட்டனர். அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அரசு ஊழியர்கள் சென்று வருவதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் அலுவலர்கள் சென்று வந்தனர். அவர்களுக்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்பட்டது.

Next Story