எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணை அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணை அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 May 2020 5:45 AM IST (Updated: 19 May 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 25-ந் தேதி தேர்வு தொடங்குகிறது.

பெங்களூரு, 

பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு, கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த தேர்வு ஜூன் மாதம் 25-ந் தேதி தொடங்குகிறது. ஜூலை மாதம் 4-ந் தேதி தேர்வு நிறைவடையும்.

ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகளுக்கு இடையிடையே ஒரு நாள் இடைவெளி விடப்பட்டுள்ளது. மொத்தம் 10 நாட்கள் தேர்வு நடக்கிறது. மொத்தம் 8 லட்சத்து 48 ஆயிரத்து 196 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுகிறார்கள்.

கிருமிநாசினி திரவம்

மாணவர்களின் வசதிக்காக 2,879 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 43 ஆயிரத்து 70 அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய தேர்வு அறையில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே இடைவெளி விடப்படும். மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு காலை 9.30 மணிக்கு வந்துவிட வேண்டும்.

தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். காலை 10.30 மணிக்கு தேர்வு தொடங்கும். மாணவர்கள் கட்டாயம் முகக்கவசத்தை அணிய வேண்டும். கிருமிநாசினி திரவத்தை பயன்படுத்தி கைகளை தூய்மைபடுத்தி கொள்ள வேண்டும். இந்த கிருமிநாசினி திரவம், அனைத்து தேர்வு மையங்களுக்கும் வழங்கப் படும்.

சுகாதாரத்துறை ஊழியர்கள்

அனைத்து தேர்வு மையங்களிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் இருப்பார்கள். உடல்நலக்குறைவுடன் வரும் மாணவர்கள் தனி அறையில் வைத்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு தொடங்கும் ஓரிரு நாட்களுக்கு முன்பு தேர்வு மையங்கள் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்படும். விடுதியில் தங்கி படித்த மாணவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

அத்தகைய மாணவர்கள் அருகில் இருக்கும் தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய மாணவர்கள் ஆசிரியர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வருகிற 25-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் எல்லை மாவட்டங்களில் உள்ளவர்கள், வேறு மாநிலத்தில் இருந்தால், அவர்கள் இங்கு வந்து தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

பி.யூ.கல்லூரி தேர்வு

சந்தனா தொலைக்காட்சியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதற்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த தேர்வு கால அட்டவணையை அறிவிக்கும் முன்பு, அதிகாரிகளுடன் பல முறை கலந்து ஆலோசனை நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு ஆங்கில தேர்வு ஜூன் 18-ந் தேதி நடைபெறும்.”

இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

பேட்டியின்போது, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உமாசங்கர், பொது கல்வித்துறை கமிஷனர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story