குடிக்க மனம் இருந்தாலும், வாங்குவதற்கு பணம் இல்லை: வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள்
குடிக்க மனம் இருந்தாலும் வாங்குவதற்கு பணம் இல்லாததால் தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.
தேனி,
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த 16-ந்தேதி மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதன்படி தேனி மாவட்டத்தில் 55 டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. முதல் 2 நாட்களும் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் காத்திருந்து மதுபானம் வாங்கிச் சென்றனர்.
3-வது நாளான நேற்று கடைகள் திறக்கப்பட்ட நிலையில், காலையில் இருந்தே மதுக்கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தேனி, ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, கம்பம் உள்பட பல்வேறு இடங்களிலும் மதுக்கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒன்றும், இரண்டுமாக மதுபான பிரியர்கள் வந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
மனம் இருந்தாலும் பணம் இல்லை
மதுபான பிரியர்களுக்கு குடிப்பதற்கு மனம் இருந்தாலும், ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக வேலைக்கு செல்ல முடியாததால் கையில் பணம் இல்லாத நிலைமை உள்ளது. மதுக்கடைகள் திறந்தவுடன் சிலர் தங்களிடம் இருந்த பணத்தை கொண்டு மதுபானம் வாங்க வந்தனர். சிலர், நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கி வந்து மது வாங்கிச் சென்றனர்.
கையில் இருந்த பணம் தீர்ந்து போன நிலையில், மதுபான பிரியர்கள் கையில் பணமின்றி மதுவாங்க வரவில்லை. மேலும் சிலர் 2 நாட்களாக மொத்தமாக மதுவாங்கி வைத்துள்ளதால் அவற்றை தங்களின் வீடுகளில் வைத்து கொஞ்சம், கொஞ்சமாக குடித்து வருகின்றனர். அவை காலியான பின்னரே மீண்டும் மதுக்கடைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுக்கடைகள் வெறிச்சோடி காணப்பட்டதால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
Related Tags :
Next Story