சேலம் மாவட்டத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின


சேலம் மாவட்டத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின
x
தினத்தந்தி 19 May 2020 1:41 AM GMT (Updated: 19 May 2020 1:41 AM GMT)

சேலம் மாவட்டத்தில் 50 சதவீத ஊழியர் களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க தொடங்கின. அதே சமயம் கட்டுப்பாடுகள் தளர்வு அறிவிக்கப்பட்டதால் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்தது.

சேலம், 

நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை அனைத்து துறை அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கின.

இதையொட்டி குறிப்பிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் மட்டுமே நேற்று வழக்கம்போல் தங்களது அலுவலகத்துக்கு பணிக்கு வந்தனர். சேலம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலகங்களும் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கின. அப்போது ஊழியர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களது பணிகளில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து துறை அலுவலர்களும் முக கவசம் அணிந்து பணிக்கு வந்திருந்ததை காண முடிந்தது.

மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தபிறகு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடந்த 54 நாட்களுக்கு பிறகு அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட்டதை காணமுடிந்தது.

இதனிடையே கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இதர துறை அலுவலகங்களுக்கு தொலைவில் இருந்து பணிக்கு வரும் ஊழியர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பட்டியலிட்டு சேகரித்து வருகின்றனர். மேலும் சுழற்சி முறையில் (2 நாட்களுக்கு ஒரு முறை) பணி ஒதுக்கீடு என்பதால் எந்தெந்த வழித்தடத்தில் பஸ்கள் தேவை என்பதை துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பட்டியல் தயாரித்து போக்குவரத்து கழகத்தில் கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதற் கான பணிகளை துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

அதேசமயம் மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் தனியார் தொழிற்சாலைகள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட தொழிலாளர் கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். அவர் களை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் வாகனங்கள் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அரசு உத்தரவுபடி கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து சேலம் மாநகரில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக் கப்பட்டு இருந்தன.

அதாவது ஜவுளி, நகைக்கடைகள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட், லீ பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதனை போலீசார் ஒழுங்குப்படுத்தினார்கள்.

அதே நேரத்தில் வாடகை கார், ஆட்டோ எதுவும் ஓடவில்லை. அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நேற்று அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story