பழையகோட்டை மாட்டுச்சந்தை ரத்து: காங்கேயம் இன மாடுகள் இணையதளம் மூலம் விற்பனை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக பழையகோட்டை மாட்டுச்சந்தை ரத்து செய்யப்பட்டுள்ளதால் காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் இணையதளம் மூலம் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முத்தூர்,
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் உலக புகழ் பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுதல் தொற்று நோய் காரணமாக மத்திய, மாநில அரசுகள் 3-ம் கட்ட ஊரடங்கினை நிறைவு செய்து 4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தி உள்ளன.
இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழையகோட்டை மாட்டுத்தாவணியில் செயல்பட்டு வந்த காங்கேயம் இன மாட்டுச்சந்தை விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு கடந்த 2 மாதங்களாக முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வசித்து வரும் நகர, கிராம பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இணையதளம் மூலம்
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் விவசாய பணிகளை தொடர்ந்து செய்திட தமிழக அரசு கடந்த மாதம் 10-ந்தேதி முதல் அனுமதி அளித்தது. இந்த நிலையில் பழையகோட்டை மாட்டுச்சந்தை ரத்து செய்யப்பட்டதால் காங்கேயம் இன மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் புதிதாக வாங்க முடியாமலும், தங்களிடம் உள்ள மாடுகளை விற்க முடியாமலும் அவதிப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பழையகோட்டை மாட்டுத்தாவணி நிர்வாகிகள் இணையதளம் வாயிலாக காங்கேயம் இன பசுமாடுகளை வாங்க, விற்க ஏற்பாடு செய்தனர்.
இதன்படி முதல் கட்டமாக 18001215662 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை இணையதளத்தில் பதிவு செய்து முகநூல், வாட்ஸ்-அப், டுவிட்டர், யூ-டியூப் மூலம் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து திருப்பூர், ஈரோடு, கோவை உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகளை வளர்க்க, விற்க விரும்பும் விவசாயிகள், வியாபாரிகள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தனர்.
160 காங்கேயம் இன மாடுகள்
இதனை தொடர்ந்து பழையகோட்டை மாட்டுத்தாவணி நிர்வாகிகள் காங்கேயம் கோசாலை அமைப்புடன் இணைந்து காங்கேயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகளை வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு உடனடியாக முன்னுரிமை அளித்து விற்பனை செய்து வருகின்றனர். இதன்படி நேற்று வரை இணையதளத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு காங்கேயம் இன பசுமாடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தம் 160 காங்கேயம் இன பசுமாடுகள், கன்றுகள், காளைகள் தற்போது வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் இணையதளத்தில் பதிவு செய்ததன் மூலம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு காராம்பசு கிடாரி கன்றுடன் காங்கேயம் இன மயிலை பசுமாடு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், சுளகிரி பகுதியை சேர்ந்த சந்திரமவுலி என்ற விவசாய இணையதளத்தில் முன்பதிவு செய்து வங்கி கணக்கில் பணம் செலுத்தி வாங்கி சென்றார்.
Related Tags :
Next Story