சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்று பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாநகரில் ரெட்டியூர், மிட்டா புதூர், சிவதாபுரம், பனங்காடு, 5 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சேலத்தில் உள்ள வெள்ளி பட்டறைகள், கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரடங்கு காரணமாக சேலத்தில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு வேலை எதுவும் இல்லாததால் தினமும் உணவுக்கு வழியில்லாமல் பரிதவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 17-ந் தேதிக்கு பிறகு 3-வது கட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டால் தங்களது சொந்த ஊருக்கு சென்று விடலாம் என நினைத்திருந்தனர். ஆனால் 4-வது முறையாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.
பின்னர் அவர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீஸ் உதவி கமிஷனர் ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள், கடந்த 55 நாட்களுக்கும் மேலாக வேலை எதுவும் இன்றி சேலத்தில் தங்கியிருப்பதாகவும், ஊரடங்கு காரணமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும், எனவே எங்களை பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீசார் தரப்பில் இன்னும் 4 நாட்கள் காத்திருக்குமாறும், அதன்பிறகு அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காத அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களை உடனடியாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் பலமுறை எடுத்துக்கூறியும் வடமாநில தொழிலாளர்கள் கேட்காததால் போலீஸ் வேன் அங்கு வரவழைக்கப்பட்டு அவர் களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து நாலாபுறமும் ஓடி கலைந்து செல்ல முற்பட்டனர். ஆனால் அவர்களை போலீசார் விரட்டிச்சென்றனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து முள்ளுவாடி ரெயில்வே கேட் வரையிலும் வடமாநில தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் போலீசார் அவர்களை விடாமல் விரட்டிச்சென்று மடக்கி பிடித்து வேனில் ஏற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பீகார் மற்றும் உத்தரபிரதேச தொழிலாளர்கள் அனைவரையும் போலீசார் வேனில் அழைத்து சென்று அவர்கள் வசித்து வந்த இடங்களில் கொண்டுபோய் விட்டனர். அப்போது வீடுகளில் இருந்து யாரும் வெளியே வரவேண்டாம் எனவும், விரைவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
இன்னும் சில நாட்களில் மாவட்ட கலெக்டரிடம் பேசி சேலத்தில் தங்கியுள்ள பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநில தொழிலாளர்களை தனி பஸ்கள் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story