உடுமலை உழவர் சந்தை பழைய இடத்தில் செயல்பட தொடங்கியது விவசாயிகள்-பொதுமக்கள் மகிழ்ச்சி
உடுமலை உழவர் சந்தை பழைய இடத்தில் செயல்பட தொடங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை,
உடுமலை உழவர் சந்தை கபூர்கான் வீதியில், அதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த உழவர்சந்தை கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி முதல் உடுமலை மத்திய பஸ்நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்தது. இங்கு ஆரம்பத்தில் காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நாளடைவில் பல்வேறு சாலைகளில் ஆங்காங்கு சாலையோரம் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டன. பலர் வீட்டிற்கு முன்பு காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
அதனால் மத்திய பஸ்நிலையத்தில் செயல்பட்டு வந்த உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்குவதற்கு வந்த பொதுமக்கள் கூட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.
13 டன் காய்கறிகள்
இதைத்தொடர்ந்து உடுமலை ஆர்.டி.ஓ. ஆர்.ரவிக் குமாரின் அறிவுரைப்படி, உழவர்சந்தை கபூர்கான் வீதியில் உள்ள பழைய இடத்திற்கு மாற்றப்பட்டு நேற்று முதல் செயல்படத்தொடங்கியது.
உழவர்சந்தை பழைய இடத்திற்கு மாற்றப்பட்டதால் உழவர்சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் மற்றும் காய்கறிகளை வாங்கி செல்வதற்காக வரும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடுமலை உழவர் சந்தைக்கு நேற்று 66 விவசாயிகள் 13 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகளை வாங்கி செல்வதற்கு பொதுமக்கள் சுமார் 1,400 பேர் வந்திருந்தனர்.
Related Tags :
Next Story