திருச்சி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கின


திருச்சி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கின
x
தினத்தந்தி 19 May 2020 9:12 AM IST (Updated: 19 May 2020 9:12 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கின. ஊழியர்கள் பஸ்களில் அழைத்து வரப்பட்டனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கின. ஊழியர்கள் பஸ்களில் அழைத்து வரப்பட்டனர்.

ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு கடந்த 17-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில் நான்காவது முறையாக வருகிற 31-ந் தேதி வரை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டபோது தமிழகத்தில் சில தளர்வுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதற்கு முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை தலைமை செயலாளர் சண்முகம் மே 18-ந் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் என அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் நேற்று பெரும்பாலான அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கின.

திருச்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, பிற்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு உள்பட அனைத்து அலுவலகங்களிலும் 50 சதவீத பணியாளர்கள் வந்து இருந்தனர். திருச்சி நகர பகுதிகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் வந்தனர். பெண் ஊழியர்கள் வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்களில் வந்தனர்.

துறையூர், தொட்டியம் பகுதிகளில் உள்ள ஊழியர்கள் ஒரு தனியார் கல்லூரிக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் அரசு பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகங்கள், திருச்சி மாநகராட்சி அலுவலகங்களும் நேற்று 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன.

வரிசையில் நின்றனர்

தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களில் வருவாய் சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று உள்ளிட்ட சான்றிதழ் கேட்டு வந்தவர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்களும், தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸ் வாங்குவதற்கும் பலர் வரிசையில் நின்றனர்.

இதேபோல் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகங்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகங்கள், வனத்துறை அலுவலகங்களும் நேற்று முதல் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கின.

வாகன போக்குவரத்து

நான்காவது முறையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் மாவட்டத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என தளர்வு அளிக்கப்பட்டதால் திருச்சி நகரில் நேற்று கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் சென்றன. காய்கறி வேன்கள், சரக்கு ஆட்டோக்கள் அதிக அளவில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றன. இதனால் ஊரடங்கில் இருந்து திருச்சி முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்ட நகரம் போல் காட்சி அளித்தது.

Next Story