அம்மா உணவகங்களில் 4½ லட்சம் பேருக்கு இலவச உணவு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்


அம்மா உணவகங்களில் 4½ லட்சம் பேருக்கு இலவச உணவு   அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்
x
தினத்தந்தி 19 May 2020 9:55 AM IST (Updated: 19 May 2020 9:55 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் உள்ள 8 அம்மா உணவகங்களில் அ.தி.மு.க. நிதியுதவியால் 4½ லட்சம் பேருக்கு 3 வேளை இலவச உணவு வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர்,  

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:-

ரூ.30 லட்சம்

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை, எளிய மக்களுக்கும், ஆதரவற்றோருக்கும் அம்மா உணவகங்கள் மூலம் 3 வேளை இலவச உணவு வழங்க அ.தி.மு.க. நிதியுதவி வழங்கியுள்ளது. 3-வது தவணையாக வருகிற 31-ந்தேதி வரை 4-வது ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள் மூலம் ஆதரவற்றோருக்கு இலவச உணவு வழங்க மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சத்து 92 ஆயிரம் கலெக்டரிடம் நிதியுதவி வழங்கியுள்ளேன். இதுவரை 3 தவணைகளாக ரூ.30 லட்சத்து 44 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

4½ லட்சம் பேர்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய அம்மா உணவக திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். இதன்மூலம் ஏழை, எளிய மக்கள் பசியாறி வருகின்றனர். தற்போது மாவட்ட அ.தி.மு.க. நிதியுதவியால் 8 அம்மா உணவகங்கள் மூலம் இதுவரை 3 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. 4-வது ஊரடங்கு காலத்தில் மேலும் 1½ லட்சம் பேருக்கு 3 வேளை இலவச உணவு வழங்கப்படும். இதன்மூலம் 4½ லட்சம் ஏழை, எளிய மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு அலுவலகம்

விருதுநகர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான போக்குவரத்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் வசதி செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார். அப்போது கலெக்டர் கண்ணன், அ.தி.மு.க. நிர்வாகிகள் நயினார் முகம்மது, தர்மலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story