கொடியை பார்த்து 100 நாடுகளின் பெயரை கூறும் சிறுவன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தான்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனில் நாடுகளின் தேசிய கொடியை பார்த்து 100 நாடுகளின் பெயரை கூறும் சிறுவன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தான்.
பனைக்குளம்,
மண்டபம் யூனியன் வாலாந்தரவை பகுதியை சேர்ந்தவர் முதிலேஸ்வரன். அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி அபர்ணா. இவர்களுக்கு நிவின் அத்விக் என்ற மகன் உள்ளான். 1 வருடம் 10 மாதங்கள் தான் இவனின் வயது. இவன் ஒரு நாட்டின் கொடியை காட்டினால் அந்த நாட்டின் பெயரை உடனே சொல்லிவிடுகிறான். இப்படி ஒன்னு, ரெண்டு நாடுகளின் பெயர் இல்லை. 100 நாடுகளின் கொடிகளை காட்டினால் அந்தந்த நாட்டின் பெயர்களை நொடிப்பொழுதில் கூறி அனைவரையும் அசத்தி வருகிறான். கொடிகளை மாற்றி மாற்றி காட்டினாலும் அந்தந்த நாட்டின் பெயர்களை சரியாக கூறி வரும் சிறுவனின் அபார நினைவாற்றலால், இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான். இதற்காக இந்தியன் சாதனை புத்தக நிறுவனம் சிறுவனின் சாதனையை பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி உள்ளது. சாதனை சிறுவனை அவனது பெற்றோர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதுகுறித்து சிறுவனின் தாய் அபர்ணா கூறும்போது, நிவின் அத்விக் குழந்தையாக இருக்கும்போதே அவனுக்கு நல்ல நினைவாற்றல் இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதன்பிறகு படங்களை காட்டி கற்றுக்கொடுக்க ஆரம்பித்தோம். ஒருமுறை சொன்னாலே அதனை நினைவில் வைத்து திரும்ப கூறிவிடுவான். எனது தந்தை முன்னாள் ராணுவ வீரர் ஆனந்தவேல் எனது மகனுடன் விளையாடும் போதெல்லாம் இதுபோன்று பயிற்சி அளித்து ஊக்கப்படுத்துவார் என்றார்.
Related Tags :
Next Story