நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கிராமப்பகுதியில் சலூன் கடைகள் திறப்பு - பொதுமக்கள் முடிவெட்டி சென்றனர்


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கிராமப்பகுதியில் சலூன் கடைகள் திறப்பு - பொதுமக்கள் முடிவெட்டி சென்றனர்
x
தினத்தந்தி 19 May 2020 11:00 PM GMT (Updated: 19 May 2020 5:57 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கிராமப்பகுதியில் நேற்று சலூன் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் ஏராளமான பொதுமக்கள் முடி வெட்டி சென்றனர்.

தூத்துக்குடி, 

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 4-வது கட்டமாக வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வேகமாக பரவி வந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டது. சலூன் கடைகள் உள்ளிட்ட மற்ற கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு வந்த நிலையில் சலூன் கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இதையொட்டி முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களுக்கும் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர்.

இந்த நிலையில் கிராமப்பகுதிகளில் உள்ள சலூன் கடைகளை மட்டும் திறந்து கொள்ள அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, 55 நாட்களுக்கு பிறகு நேற்று நெல்லை மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் திறக்கப்பட்டன.

ஊரடங்கால் முடி வெட்டாமல் இருந்து வந்த கிராமப்பகுதியை சேர்ந்த மக்கள் சலூன் கடைகளுக்கு சென்று முடி வெட்டிக்கொண்டனர். முதியோர் முடி வெட்டி, முகசவரம் செய்து, தலை முடிக்கு டை அடித்துக்கொண்டனர். இதேபோல் இளைஞர்களும் சலூன் கடைகளில் குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்த கடைகளில், அவர்களை நிற்க வைக்காமல் நேரத்தை குறிப்பிட்டு, அந்த நேரத்துக்கு மட்டும் கடைக்கு வந்தால் போதும் என்று முடி திருத்தும் தொழிலாளர்கள் கூறி அனுப்பி வைத்தனர். இதனால் நேற்று காலை முதல் மாலை வரை சலூன் கடைகளில் கூட்டம் காணப்பட்டது.

ஊரடங்கால் முடிவெட்ட முடியாததால் சிலர் தலையில் அதிக முடி வளர்த்தும், தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் வந்தனர். அவர்கள் நேற்று முடியை நன்றாக குறைத்துக் கொண்டனர்.

இதுகுறித்து சலூன் கடைக்காரர்கள் கூறுகையில், “இதுவரை தொழில் வாய்ப்பு இன்றி சிரமப்பட்டு வந்தோம். தற்போது கடை திறந்து இருப்பதன் மூலம் எங்களுக்கும் வருமானம் கிடைத்துள்ளது. பொதுமக்களுக்கும் சிகை அலங்காரம் செய்ய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது“ என்றனர்.

தென்காசி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் மொத்தம் 700 கடைகள் உள்ளன. அந்த கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஆயிரப்பேரி, காசிமேஜர்புரம், கணக்கப்பிள்ளைவலசை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் உள்ள கடைகள் திறந்து இருந்தன. இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து முடிவெட்டி சென்றனர். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை மொத்தம் 3 ஆயிரத்து 600 முடிதிருத்தும் கடைகள் உள்ளன. இதில் கிராமப்புறங்களில் உள்ள சுமார் 100 கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. குறிப்பாக புதுக்கோட்டை, கூட்டாம்புளி, குலையன்கரிசல், குரும்பூர், தட்டார்மடம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி உள்ளிட்ட கிராமப்புறங்களில் மட்டுமே கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் பெரும்பாலான முடிதிருத்தும் தொழிலாளிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் அனைத்து கடைகளையும் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story