சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள ஆயிரக்கணக்கான மொத்த விற்பனை கடைகள் ஒரு வாரம் மூடல்; மளிகை பொருட்கள் விலை உயரும் அபாயம்
சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள ஆயிரக்கணக்கான மொத்த விற்பனை கடைகள் ஒரு வாரம் மூடப்படுகின்றன. இதனால் மளிகை பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. பாரிமுனை, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக பாரிமுனையை அடுத்த கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட தெருக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகமாகவே உள்ளனர். பலர் தனிமைப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள்.
இதனால் பரபரப்பான கொத்தவால்சாவடி மொத்த விற்பனை சந்தையும் கோயம்பேடு மார்க்கெட் போல கொரோனா பரவும் தலமாக அமைந்துவிடக்கூடாது என்று மாநகராட்சி முடிவு எடுத்தது. இதையடுத்து கொத்தவால்சாவடியில் உள்ள மொத்த விற்பனை கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடைகள் மூடுவது தொடர்பாக வியாபாரிகள் தரப்பில் ஆலோசிக்கப்பட்டது. இதில் மொத்த விற்பனை கடைகள் அனைத்தையும் ஒரு வார காலம் மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள மொத்த விற்பனை கடைகள் நேற்று மூடப்பட்டன. அரிசி, பருப்பு, எண்ணெய் முதலான மளிகை பொருட்கள், நொறுக்குத்தீனிகள், அப்பள வகைகள், எண்ணெய் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என ஆயிரக்கணக்கான மொத்த விற்பனை கடைகள் மூடப்பட்டன. இதனால் வழக்கமான பரபரப்பு இல்லாமல் கொத்தவால்சாவடி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னையின் முதல் சந்தை என்ற சிறப்பை பெற்ற கொத்தவால்சாவடியில் எண்ணெய், சோப்பு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து வகையான மளிகை பொருட்களும் மொத்தமாக விற்பனை செய்யப்படுகின்றன. ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இங்கு சரக்குகள் கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் வரையிலான வடமாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போது கொரோனா பரவல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கொத்தவால்சாவடி சந்தை மூடப்பட்டு உள்ளதால் மளிகை பொருட்கள் விலை வரும் நாட்களில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு ஏற்படுவதுடன், இருப்பில் உள்ள மளிகை பொருட்களும் சில்லரை விற்பனையால் விலை உயர வாய்ப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கொத்தவால்சாவடி மொத்த வியாபாரிகள் கூறுகையில், “கொத்தவால்சாவடி சந்தை 2 நாட்கள் மூடினாலே பாதிப்பு நிச்சயம். இப்போது ஒருவாரம் மூடப்படுவதால் நிச்சயம் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதுடன் விலை உயரும் அபாயமும் நிலவும். ஊரடங்கு காரணமாக வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு இது நிச்சயம் சோதனையாகவே இருக்கும். ஆனாலும் கொரோனா பரவலை தடுக்க இப்போதைய நிலையில் வேறு நடவடிக்கைகள் சாத்தியமில்லை என்பதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்ட காலத்தில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் கையாளுவதுடன், மீண்டும் கடைகள் திறக்கும் சமயத்தில் தேவையான உதவிகளையும் மாநகராட்சி செய்துதர வேண்டும்”, என்றனர்.
Related Tags :
Next Story