திருவண்ணாமலை அருகே சொத்து தகராறில் பயங்கரம்; விவசாயி வெட்டிக்கொலை - மகன் கைது
திருவண்ணாமலை அருகே சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
கலசபாக்கம்,
திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம் ஆனந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 68), விவசாயி. அவரது மனைவி கமலா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் பழனிக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மனைவி ஆண்டாள், மாமனார் வீட்டிலேயே இருந்து வருகிறார்.
2-வது மகன் சுப்பிரமணிக்கு (33) திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. தந்தையுடன் விவசாய வேலை செய்து வருகிறார். சுப்பிரமணிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் நிலத்தைப் பிரித்து தனது பெயருக்கு எழுதி தரும்படியும் தகராறு செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி, மாணிக்கத்திடம் மீண்டும் நிலத்தை பிரித்து தரும்படி கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த அவர் கத்தியால் தந்தை என்றும் பாராமல் மாணிக்கத்தின் காலை வெட்டி உள்ளார்.
இதனையடுத்து அவர் அங்கிருந்து வீட்டுக்கு தப்பி சென்றார். பலத்த காயத்துடன் துடிப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே மாணிக்கம் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய சுப்பிரமணியை வலைவீசி தேடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story