நீர்ப்பாசன திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு ரமேஷ் ஜார்கிகோளி உத்தரவு


நீர்ப்பாசன திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு ரமேஷ் ஜார்கிகோளி உத்தரவு
x
தினத்தந்தி 20 May 2020 4:30 AM IST (Updated: 20 May 2020 3:22 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பாசன திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி உத்தரவிட்டார்.

பெலகாவி,

பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகாவில் மல்லபிரபா திட்ட பணிகள் குறித்து என்ஜினீயர்களுடன் நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

“மல்லபிரபா நவீனமய திட்டம், ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நிலம் கையகப்படுத்தவும், சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு அதற்கான தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் நீர்ப்பாசனத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதி வழங்கப்படும்.

கருப்பு பட்டியல்

நீர்ப்பாசன திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்க ஒப்பந்ததாரர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணிகளை முடிக்க தாமதித்தால் அத்தகைய ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த ஒப்பந்ததாரர் களின் பெயர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்.

நீர்ப்பாசன திட்ட பணிகளில் காலதாமதம் ஏற்படாமல் குறித்த காலத்தில் முடிக்குமாறு அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும். ராஜஸ்தான், மராட்டியத்தை போல் நீர்ப்பாசன திட்டங்களை விவசாயிகளின் பங்கேற்புடன் மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.”

இவ்வாறு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பேசினார்.

இந்த கூட்டத்தில் துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி, எம்.எல்.ஏ.க்கள் மகந்தேஷ், கவுசலகி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story