ஊரடங்கையொட்டி தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை தாமதமாக செலுத்தினாலும் அபராதம் கிடையாது வருங்கால வைப்புநிதி ஆணையர் தகவல்
ஊரடங்கையொட்டி தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை தாமதமாக செலுத்தினால் அபராதம் கிடையாது என, வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 4-வது கட்ட ஊரடங்கும் வருகிற 31-ந் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் 45 நாட்களுக்கும் மேலாக இயங்காமல் மூடப்பட்டன. தற்போது கடந்த வாரத்தில் இருந்து தான் நிறுவனங்களுக்கு இயங்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளன. நீண்ட ஊரடங்கின் காரணமாகவும், பிற தடைகளின் காரணமாகவும், தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி நிலுவை தொகையை சட்டரீதியான பங்களிப்பை செலுத்த முடியாமல் நிறுவனங்கள் பல இருந்து வருகின்றன.
அபராதம் கிடையாது
ஊரடங்கின் போது பங்களிப்பு கட்டணம் மற்றும் நிர்வாக கட்டணங்களை நிறுவனங்கள் செலுத்த முடியாத சூழல் தெரியவருகிறது. தற்போது உள்ள பொருளாதார காரணங்களால் ஏற்படும் இத்தகைய தாமதங்களை இயல்புநிலையாக கருதக்கூடாது. இந்த ஊரடங்கு கால காரணத்திற்காக ஏற்படும் தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது என வருங்கால வைப்புநிதி அலுவலகம் முடிவு செய்துள்ளது. எனவே நிலுவைதொகையை தாமதமாக செலுத்தினாலும் அபராதம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் பதிவு பெற்ற 6 லட்சத்து 50 ஆயிரம் நிறுவனங்களுக்கு சட்டவிதிமுறைகளை பின்பற்றுவதை எளிமையாக்கப்பட்டுள்ளது. இதுபோல் அபராதம் மற்றும் தண்டனை தொகை செலுத்தும் பொறுப்பில் இருந்து நிறுவனங்களும் விடுவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story