தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சிறுகுப்பாவில் இறக்கிவிடும்படி கதறி அழுத பெண் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் பரபரப்பு
பெங்களூருவில் இருந்து வெளியூர்களுக்கு 2 ஆயிரம் பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.
பெங்களூரு,
பெங்களூருவில் இருந்து வெளியூர்களுக்கு 2 ஆயிரம் பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இந்த நிலையில் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சிறுகுப்பாவுக்கு செல்ல மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு ஒரு பெண் வந்தார். அந்த பெண்ணை பஸ்சில் ஏற்ற டிரைவர்களும், கண்டக்டர்களும் மறுத்ததால் அவர் கதறி அழுத சம்பவம் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் ஊரடங்கை முதல்-மந்திரி எடியூரப்பா பெருமளவு தளர்த்தி உள்ளார். மேலும் மாநிலத்தில் பஸ்கள், ஆட்டோக்கள், ரெயில்கள் இயங்க முதல்-மந்திரி எடியூரப்பா அனுமதி அளித்துள்ளார். அதன்தொடர்ச்சியாக நேற்று கர்நாடகத்தில் பெரும்பாலான ஊர்களில் பஸ்கள் இயக்கப்பட்டன.
பெங்களூருவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பி.எம்.டி.சி. அரசு பஸ்கள் 1,500, கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் 2 ஆயிரம் என மொத்தம் 3,500 பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்கள் அனைத்தும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இயக்கப்பட்டன. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட பி.எம்.டி.சி. அரசு பஸ்களில்(பெங்களூருவுக்குள் மட்டும் இயங்கும் டவுன் பஸ்கள்) பயணிகளுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. மாறாக தினசரி மற்றும் வாராந்திர பாஸ்கள் வழங்கப்பட்டன
அதாவது தினசரி பாஸ் ரூ.70 என்ற நிலையிலும், வாராந்திர பாஸ் ரூ.300 என்ற நிலையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டன. பஸ்களில் பயணிகள் அனைவரும் சமூக விலகலை பின்பற்றியே அமர வைக்கப்பட்டனர். முகக்கவசம் அணியாமல் வந்த பயணிகள் பஸ்களில் ஏற்றப்படவில்லை. மேலும் சில பஸ்களில் சானிடைசர் திரவம், தெர்மல் ஸ்கேனர் கருவி போன்றவற்றை அதிகாரிகள் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் டிரைவர்களும், கண்டக்டர் களும் ஆதங்கம் அடைந்தனர்.
இதேபோல் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் பெங்களூருவில் இருந்து தொலைதூரம் உள்ள ஊர்களுக்கு தவிர மற்ற ஊர்களுக்கு இயக்கப்பட்டன. அதாவது மராட்டியத்தையொட்டி உள்ள கலபுரகி, உத்தர கன்னடா, ராய்ச்சூர், பீதர், பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களை தவிர பிற ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
ஆனால் கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல ஏராளமான பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் தங்களது ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததை அறிந்து கவலையும், ஆதங்கமும் அடைந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் ஊருக்கு அருகே உள்ள ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் ஏறிச் சென்றனர். சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து மைசூருவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து சிவமொக்கா, ஹாசன், பல்லாரி, தட்சிண கன்னடா உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் சென்றன.
முதலில் டிரைவர்களும், கண்டக்டர்களும் பெங்களூருவில் இருந்து புறப்படும் பஸ்கள் குறிப்பிட்ட ஊர்களுக்கு மட்டுமே செல்லும் என்றும், இடையில் எங்கும் நிற்காது என்றும் கூறினர். மேலும் ஒரே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தனர். இதனால் இடையே உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். மேலும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் பெங்களூருவில் இருந்து பல்லாரி மாவட்டத்திற்கு செல்லும் வழியில் உள்ள சிறுகுப்பா ஊரைச் சேர்ந்த ஒரு பெண் தனது குழந்தைகளுடன் மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் தான் சிறுகுப்பாவுக்கு செல்ல வேண்டும் என்று கூறி பல்லாரிக்கு செல்லும் பஸ்சில் ஏற முயன்றார். அப்போது அவரை பஸ்சில் ஏற்றாமல் டிரைவர்களும், கண்டக்டர்களும் தடுத்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் கதறி அழுத அந்த பெண் தனது தந்தை இறந்துவிட்டதாகவும், அவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவே தான் செல்வதாகவும், அதனால் தன்னை சிறுகுப்பாவில் இறக்கிவிடும்படியும் கேட்டு மன்றாடினார். ஆனால் டிரைவர்களும், கண்டக்டர்களும் அந்த பெண்ணின் கோரிக்கையை ஏற்கவில்லை. வேண்டுமென்றால் பல்லாரிக்கு நீங்கள் சென்றுவிட்டு அங்கிருந்து சிறுகுப்பாவுக்கு மீண்டும் வந்துவிடுங்கள் என்று கூறினர்.
இதனால் அழுது புலம்பிய அந்த பெண்ணின் நிலை குறித்து அறிந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் நேரில் வந்தனர். பின்னர் அவர்கள் அனைத்து பஸ்களையும் எல்லா ஊர்களிலும் நிறுத்திச் செல்லும்படி டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தினர். அதையடுத்து அந்த பெண், போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு சிறுகுப்பாவுக்கு புறப்பட்டு சென்றார்.
இத சம்பவம் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, நாளை(அதாவது இன்று) முதல் பெங்களூருவில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப் படும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story