கர்நாடகத்தில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு


கர்நாடகத்தில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 20 May 2020 5:15 AM IST (Updated: 20 May 2020 4:03 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஒரே நாளில் 3 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். மேலும் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை நேற்று தொட்டது. அதாவது ஒரே நாளில் 149 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தனிமனித இடைவெளி, முக கவசம் உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களுடன் நேற்று முதல் மாநிலத்தில் பஸ், வாடகை கார், ஆட்டோக்கள் ஓடத்தொடங்கி உள்ளன. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நேற்று அதிகபட்சமாக அதிகரித்து இருப்பது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 149 பேர்களில் 104 பேர் மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1,208 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 149 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு நேற்று 3 பேர் பலியாகியுள்ளனர். பல்லாரியை சேர்ந்த 61 வயது முதியவர், விஜயாப்புராவை சேர்ந்த 65 வயது முதியவர், பெங்களூருவை சேர்ந்த 54 வயது நபர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர். இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,354 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை 543 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று புதிதாக கொரோனா பாதித்தவர்களில் பெங்களூருவில் 6 பேர், மண்டியாவில் 71 பேர், கலபுரகியில் 13 பேர், தாவணகெரேயில் 22 பேர், பாகல்கோட்டையில் 5 பேர், விஜயாப்புரா, பீதர், கதக், யாதகிரி, சித்ரதுர்கா, ராய்ச்சூரில் தலா ஒருவர், உத்தர கன்னடாவில் 4 பேர், ஹாசனில் 3 பேர், சிவமொக்காவில் 10 பேர், உடுப்பியில் 4 பேர், சிக்கமகளூருவில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களில் பெங்களூரு நகரில் 237 பேர், மண்டியாவில் 160 பேர், கலபுரகியில் 120 பேர், பெலகாவியில் 115 பேர், தாவணகெரேயில் 108 பேர், மைசூருவில் 89 பேர், பாகல்கோட்டையில் 75 பேர், விஜயாப்புராவில் 56 பேர், பீதரில் 55 பேர், உத்தர கன்னடாவில் 55 பேர், தட்சிண கன்னடாவில் 42 பேர், ஹாசனில் 32 பேர், தார்வாரில் 26 பேர், சிக்பள்ளாப்பூரில் 22 பேர், சிவமொக்காவில் 24 பேர், பல்லாரியில் 18 பேர், கதக்கில் 17 பேர், உடுப்பியில் 14 பேர், யாதகிரியில் 12 பேர், துமகூருவில் 9 பேர், சித்ரதுர்காவில் 10 பேர், கோலாரில் 9 பேர், ராய்ச்சூரில் 7 பேர், பெங்களூரு புறநகரில் 6 பேர், சிக்கமகளூருவில் 5 பேர், ஹாவேரியில் 3 பேர், கொப்பலில் 3 பேர், குடகில் 2 பேர், மற்றவர்கள் 23 பேர் உள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரத்து 599 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 6,936 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்கமகளூருவில் நேற்று புதிதாக 5 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது. ராமநகர், சாம்ராஜ்நகர் ஆகிய 2 மாவட்டங்கள் மட்டுமே வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டங்களாக உள்ளன.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 100-க்கும் கீழ் தான் தினசரி பாதிப்பு என்பது இருந்து வந்தது. ஆனால் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 100 என்ற எண்ணிக்கையை தாண்டி 149 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 104 பேர் மும்பைக்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்களால் தான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், வைரஸ் தொற்றுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது, சுகா தாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Next Story