தஞ்சையில் இருந்து பீகாருக்கு 1,464 தொழிலாளர்கள் ரெயிலில் பயணம்
தஞ்சையில் இருந்து தனி ரெயிலில் பீகாருக்கு 1,464 தொழிலாளர்கள் புறப்பட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையில் இருந்து தனி ரெயிலில் பீகாருக்கு 1,464 தொழிலாளர்கள் புறப்பட்டனர்.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் வேலை செய்துவந்த வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல முடியாமல் தவித்தனர். அவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவவசதிகள் அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி, வெளிமாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 1,103 பணியாளர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 230 பணியாளர்கள் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் 91 பணியாளர்கள், திருச்சியில் இருந்து 40 பேர் என மொத்தம் 1,464 வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலமான பீகார் மாநிலத்திற்கு தனி ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கலெக்டர் பேட்டி
வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட் களை வழங்கி வழியனுப்பி வைத்த கலெக்டர் கோவிந்தராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் வெளிமாநிலங்களிலிருந்து வந்த 4 ஆயிரம் பேர் வேலை செய்து வந்தனர். அவர்களில் வெளி மாநிலங்களுக்கு செல்ல 2 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி உ.பி. மாநிலத்துக்கு 600 பேர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது 1,464 பேர் பீகார் மாநிலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சந்தோசமாக ஊர் திரும்புகின்றனர். வெளிமாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், அவர்களை பணியமர்த்தியவர்கள் சார்பிலும் தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டது. சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ சான்றிதழ் பெற்ற பிறகே ஊருக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
1,800 பேர்
விருப்பம் தெரிவித்தவர்கள் அனுப்பப்பட்டு உள்ளனர். மேலும் பஸ் மூலமும் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 1,800 பேர் அனுப்பப்பட்டு உள்ளனர். இன்னும் ஊர் செல்ல விரும்பினால் அவர்கள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படுவார்கள். பல பகுதிகளில் வெளிமாநில தொழிலாளர்கள் இங்கேயே தங்கி தங்களது வேலையை தொடர்ந்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ஓட்டல்களில் அவர்கள் செலவில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சக்திவேல், மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கிளாஸ்டன்புஷ்பராஜ், வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story