புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தொடரும் சோகம் லாரி மீது பஸ் மோதி 4 பேர் சாவு 22 பேர் படுகாயம்


புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தொடரும் சோகம் லாரி மீது பஸ் மோதி 4 பேர் சாவு 22 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 May 2020 4:45 AM IST (Updated: 20 May 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

சொந்த ஊர் செல்ல ரெயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த போது லாரி மீது பஸ் மோதி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மும்பை, 

சொந்த ஊர் செல்ல ரெயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த போது லாரி மீது பஸ் மோதி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொரோனா ஊரடங்கால் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மராட்டிய மாநிலம் நாக்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக சோலாப்பூரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் பஸ் பிடித்து நாக்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அதிகாலை 3.30 மணியளவில் அவர்களது பஸ் யவத்மால் மாவட்டத்தில் உள்ள கோல்வன் கிராம பகுதியில் வந்து கொண்டிருந்தது.

பயணிகள் அனைவரும் அயர்ந்த தூக்கத்தில் இருந்தனர். அப்போது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கட்டுமான பொருட்கள் ஏற்றியிருந்த லாரி மீது பஸ் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்து துடித்து கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பஸ் டிரைவர் தூங்கியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற போது மராட்டியத்தில் சரக்கு ரெயில் மோதி 16 பேர் பலியானதும், உத்தரபிரதேசத்தில் லாரிகள் மோதியதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 25 பேர் பலியான துயரமும் சமீபத்தில் தான் நடந்தன. இன்னும் பலர் பல்வேறு சம்பவங்களில் உயிரை மாய்த்த நிலையில், மீண்டும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியிருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story