மும்பை ரெயில் நிலையம் முன் திரண்ட தொழிலாளர்கள் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்
சொந்த ஊர் திரும்புவதற்காக நேற்று மும்பை பாந்திரா ரெயில் நிலையம் முன் திரண்ட தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
சொந்த ஊர் திரும்புவதற்காக நேற்று மும்பை பாந்திரா ரெயில் நிலையம் முன் திரண்ட தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் மும்பையில் சிக்கி உள்ளனர். தற்போது அவர்கள் சிறப்பு ரெயில், பஸ்கள் மூலம் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதில் நேற்று மும்பை பாந்திரா டெர்மினசில் இருந்து பீகார் மாநிலத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட இருந்தது.
இதையறிந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பாந்திரா ரெயில் நிலையம் முன் திரண்டனர். ஆனால் சிறப்பு ரெயிலில் பயணம் செய்ய வேண்டிய தொழிலாளர்களை ஏற்கனவே மாநில அரசு தேர்வு செய்து இருந்தது. இதை அறியாமல் மற்ற தொழிலாளர்களும் அங்கு திரண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு சிறப்பு ரெயிலில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர்களை மட்டும் சோதனை நடத்தி ரெயில் நிலையம் உள்ளே அனுப்பினர். பின்னர் ரெயில் நிலையம் அருகில் திரண்டு இருந்த மற்ற தொழிலாளர்களை லேசான தடியடி நடத்தி அங்கு இருந்து கலைத்தனர். இதனால் நேற்று பாந்திரா ரெயில் நிலையம் அருகில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் பாந்திரா டெர்மினசில் இருந்து பீகார் மாநிலம் புர்னியாவுக்கு 1,700 தொழிலாளர்களுடன் சிறப்பு ரெயில் புறப்பட்டு சென்றதாக மேற்கு ரெயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story