ஆஸ்பத்திரிகளில் புறக்கணிக்கப்படும் கொரோனா அல்லாத நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் அவதி
நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் தலைநகர் மும்பையில் மிகுந்த வீரியத்துடன் கொரோனா பரவி வருகிறது. இதன் காரணமாக மாநில சுகாதாரத்துறையும், டாக்டர்களும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும், தொற்று பாதித்த நோயாளிகளை குணப்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக கொரோனா அல்லாத நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆஸ்பத்திரிகளில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பரேலில் உள்ள கே.இ.எம். ஆஸ்பத்திரியில் உள்ள 400 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட முடியாத சூழல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுபோல புறநோயாளிகள் பிரிவிலும் நோயாளிகள் நீண்டநேரம் காத்து கிடக்க வேண்டி உள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். இதுபற்றி கே.இ.எம். ஆஸ்பத்திரி டீன் ஹேமந்த் தேஷ்முக் கூறியதாவது:-
நாங்கள் நோயாளிகளை திருப்பி அனுப்ப முடியாது. இருப்பினும் அவர்களுக்கு படுக்கைகள் கிடைப்பது உண்மையிலேயே சவாலாக உள்ளது. பலர் நோய்வாய்ப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினருக்கு படுக்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நள்ளிரவு வரை காத்து கிடக்கிறார்கள், என்றார். கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவே அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், தற்போதுள்ள மருத்துவமனைகளை தவிர கோரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்று பிரத்யேகமாக எந்த வசதியும் ஏற்படுத்தப்படவில்லை என மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.
Related Tags :
Next Story