எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறிவிப்பு: வெளிமாவட்டங்களுக்கு சென்ற 587 மாணவர்கள் நாளை திண்டுக்கல்லுக்கு வரும்படி அழைப்பு


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறிவிப்பு:  வெளிமாவட்டங்களுக்கு சென்ற 587 மாணவர்கள்  நாளை திண்டுக்கல்லுக்கு வரும்படி அழைப்பு
x
தினத்தந்தி 19 May 2020 11:29 PM GMT (Updated: 19 May 2020 11:29 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்ற 587 எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் நாளை திண்டுக்கல்லுக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல், 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பள்ளி தேர்வுகள் நடைபெறவில்லை. மேலும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது. இந்தநிலையில் அடுத்த மாதம் (ஜூன்) 15-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் பொதுத்தேர்வு குறித்து கடந்த மாதம் வரை அறிவிப்பு இல்லை. மேலும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால், மாணவர்கள் பலர் வெளிமாவட்டங்களில் வசிக்கும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று விட்டனர். எனவே, வெளிமாவட்டங்களுக்கு சென்றுள்ள மாணவர்கள், ஆசிரியர்களை திரும்ப அழைக்கும்படி கல்வித்துறை உத்தரவிட்டது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 924 மாணவர்கள், 12 ஆயிரத்து 956 மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 880 பேர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகின்றனர். இவர்களில் வெளிமாவட்டங்களுக்கு சென்ற மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். அதில் 587 மாணவ-மாணவிகள் வெளிமாவட்டங்களுக்கு சென்று விட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் நாளை (வியாழக்கிழமை) திண்டுக்கல் மாவட்டத்துக்கு திரும்பி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் ஆசிரியர்களும், மாவட்டத்துக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story