50 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்


50 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்
x
தினத்தந்தி 19 May 2020 11:36 PM GMT (Updated: 19 May 2020 11:36 PM GMT)

புதுவையில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின. ஊழியர்கள் முக கவசம் அணிந்து பணிக்கு வந்தனர்.


புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த ஊரடங்கு 4-ம் கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் ஓரளவு தளர்வு வழங்கப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பி வருகிறது. புதுவை மாநிலத்தில் 30 சதவீதம் அரசு ஊழியர்கள் கடந்த 4-ந் தேதி பணிக்கு திரும்பினர். அவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் புதுவை அரசு குரூப் ‘பி’ பிரிவில் இருப்பவர்கள் 50 சதவீதமும் ‘சி’ பிரிவு ஊழியர்கள் 33 சதவீதமும் பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையின் உயரதிகாரிகள் அழைத்தால் கூடுதலாக ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து மக்கள் பணியில் தொடர்புடைய சில துறைகளில் நேற்று 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். அவர்கள் முக கவசம் அணிந்த படியும், சமூக இடைவெளி கடைபிடித்தும் பணியாற்றி வருகின்றனர். மேலும் அடிக்கடி அவர்கள் கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்த படியும் பணியாற்றினர்.

அலுவலகங்களில் இத்தனை நாட்களாக பிரிந்திருந்த சக ஊழியர்களை, நண்பர்களை பார்த்து பணியாளர்கள் அகமகிழ்ந்தனர். ஆனாலும் சமூக இடைவெளியை மனதில்கொண்டு தள்ளி நின்றே நலம் விசாரிக்க தொடங்கியதை பார்க்க முடிந்தது.

அதன்படி நேற்று 50 சதவீத ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர். அலுவலகம் வந்த ஓரிரு நிமிட நலம் விசாரிப்புக்கு பின்னர் உடனடியாக பணியை தொடங்கினர். ஆனாலும் நீண்ட நாட்களாக கணினி செயல்படாமல் இருந்தது, கோப்புகள் கையாளப்படாமல் இருந்தது போன்றவற்றால் பணியில் லேசான தொய்வு காணப்பட்டது. ஆனாலும் ஊழியர்கள் அதனை சமாளித்து வழக்கம்போலவே பணிகளில் ஈடுபட்டனர்.

Next Story