புதுவையில் திறப்பு தேதி தெரியாமல் மதுக்கடைகள் முன் குவிந்த குடிமகன்கள்


புதுவையில் திறப்பு தேதி தெரியாமல் மதுக்கடைகள் முன் குவிந்த குடிமகன்கள்
x
தினத்தந்தி 20 May 2020 5:19 AM IST (Updated: 20 May 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படும் தேதி தெரியாமல் மதுக்கடைகள் முன் குடிமகன்கள் குவிந்தனர். கடைகள் திறக்கப்படாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.



புதுச்சேரி, 

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மதுக்கடைகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்தநிலையில் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று கடையின் உரிமையாளர்களும், மது பிரியர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். 4-வது கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று முன் தினம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மதுக் கடைகளை உடனே திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு மதுக்கடை உரிமையாளர்களுடன் அமைச்சர் நமச்சிவாயம், கலெக்டர் அருண் ஆகியோர் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் தடை காலத்தின் போது மது பாட்டில் கடத்தல், திருட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட மதுக் கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. கலால் துறை சட்ட விதிகளை பின்பற்றி படிப்படியாக இந்த கடைகளை திறக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இருப்பினும் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி மதுக்கடைகளை திறக்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மீண்டும் 2-வது முறையாக அவசர அவசரமாக அமைச்சரவை கூடி மது பானங்களுக்கு 50 சதவீதம் கோவிட் வரி விதிக்கப்பட்டு கவர்னரின் ஒப்புதல் பெற்று இன்று (20-ந் தேதி) மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் மதியம் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட மதுக்கடைகள் திறப்பு தொடர்பான தகவல் வலை தளங்களில் வேகமாக பரவியது. இதனால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 50 நாட்களுக்கு பிறகு உள்ளூர் மது வகைகள் கிடைக்கப் போகிறது என்ற மன நிலையில் குடிமகன்கள் நேற்று காலை 6 மணி முதல் மதுக் கடைகளின் முன்பு குவிய தொடங்கினர். மதுக்கடைகள் வெகு நேரமாகியும் திறக்கப் படாத போதிலும் அவர்கள் அங்கு காத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களிடம் இன்று (நேற்று) மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது. நாளை (இன்று) தான் மதுக் கடைகள் திறக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து கடைகளை பார்த்து கும்பிட்டுவிட்டு அவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் மதுக்கடைகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை அதன் உரிமையாளர்கள் செய்து வருகிறார்கள். கடைகளை திறந்து மது பானங்களை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடைகள் முன்பு மதுபாட்டில்கள் வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கோடுகள் வரையப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் கூட்ட நெரிசலை தடுக்க சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைத்துள்ளனர்.

Next Story