பொய் புகாரில் முன்னாள் ஊராட்சி தலைவரை கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்


பொய் புகாரில் முன்னாள் ஊராட்சி தலைவரை கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 20 May 2020 5:30 AM IST (Updated: 20 May 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

பொய் புகாரில் முன்னாள் ஊராட்சி தலைவரை கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கொரடாச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.

கொரடாச்சேரி, 

பொய் புகாரில் முன்னாள் ஊராட்சி தலைவரை கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கொரடாச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் ஊராட்சி தலைவர்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பருத்தியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜ்குமார். இவர் தி.மு.க.வை சேர்ந்தவர். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மதுவிலக்கு போலீசார் போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து பருத்தியூர் கிராமத்தை சேர்ந்த சிலர் திருவாரூர் மதுவிலக்கு போலீஸ் நிலையம் சென்று விளக்கம் அளித்து ராஜ்குமாரை திரும்ப அழைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பொய் புகாரில் போலீசார் ராஜ்குமாரை கைது செய்ததை கண்டித்து கொரடாச்சேரி போலீஸ் நிலையம் அருகே பொதுமக்கள் சாலையின் இருபுறமும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பருத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி செல்வம் தலைமை தாங்கினார். அப்போது பொய் புகாரில் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றதை கண்டித்தும், பொய் புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதில் பருத்தியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் அப்புசாமி, அய்யாக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் ஆகியோர் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story