வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் வினியோகம்
சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி, முத்துலாபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில் சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.
உத்தமபாளையம்,
சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி, முத்துலாபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளை சேர்ந்த சிலர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த இரு கிராமங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில் சித்த மருந்துகள் வழங்கப்பட்டன. இந்த பணியில் மாவட்ட கொரோனா தொற்றுக்கான சித்த மருத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சிராஜுதீன் தலைமையில் மருத்துவ குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று சித்த மருந்துகளை வழங்கினர். கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம், அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம் ஆகிய மருந்துகள் வழங்கப்பட்டன. அதுபோல் ஆயுர்வேத மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இந்த குழுவினருடன் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மணிகண்டன், முத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திருக்கண்ணன் ஆகியோர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story