துபாயில் புற்றுநோயால் போராடும் போடி வாலிபர் மீட்டுவர அரசுக்கு, பெற்றோர் கோரிக்கை
போடியை சேர்ந்த வாலிபர் துபாய்க்கு வேலைக்கு சென்ற நிலையில் அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவரை மீட்டுவர அரசுக்கு அவருடைய பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி,
தேனி மாவட்டம், போடி சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த செல்வம் மகன் கணேஷ்குமார் (வயது 27). இவர் பட்டயப்படிப்பு படித்துள்ளார். வேலைக்காக துபாய்க்கு சென்றார். அங்கு வேலை பார்த்து வந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் துபாயில் இருந்து அவர் தனது உடல் நிலை குறித்து உருக்கமான ஒரு வீடியோ பதிவு செய்து அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில், தனக்கு மஞ்சள் காமாலை மற்றும் புற்றுநோய் பாதிப்பு உள்ளதாகவும், தன்னால் சாப்பிட கூட முடியாமல் உடல் எடை குறைந்து வருவதாகவும் கூறி இருந்தார். மேலும் அதில் தன்னை சாவதற்குள் தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு அரசுக்கு அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெற்றோர் மனு
இந்நிலையில், கணேஷ்குமாரின் பெற்றோர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவருடைய தந்தை செல்வம் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில், “எனது மகன் கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி துபாய்க்கு வேலைக்கு சென்றார். தற்போது அவர் மஞ்சள்காமாலை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். எனவே எனது மகனை சொந்த ஊருக்கு மீட்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும். வருகிற 22-ந்தேதி துபாயில் இருந்து இந்தியாவுக்கு கேரளா மார்க்கமாக விமானம் வர இருக்கிறதாக தெரியவருகிறது. எனவே, எனது மகனை மீட்டுக் கொடுக் குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story