தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக பல மணி நேரம் காத்திருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள்
தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக அமைப்புசாரா தொழிலாளர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர்.
கோவை,
கட்டுமானம், தனியார் நிறுவன ஓட்டுனர், சாலையோர கடைக்காரர்கள் உள்பட பலர் அமைப்பு சாரா தொழிலாளர் நலத்துறையில் தங்கள் பெயர்களை பதிவு செய்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு 60 வயதாகும் போது ஓய்வூதியம் கிடைக்கும். தற்போது கொரோனா தாக்கத்தினால் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். அவர்களின் நலனுக்காக தமிழக அரசு 2 ஆயிரம் ரூபாயை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்துகிறது. ஆனால் இவர்களில் பலருக்கு வங்கி கணக்கு இல்லை. இதனால் அவர்களுக்கு நிவாரணத் தொகை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து வங்கி கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கோவையில் உள்ள சில தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கி வருகிறார்கள்.
பல மணி நேரம் காத்திருந்து...
அதன்படி கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் நேற்றுக்காலை 8 மணி முதல் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். தபால் அலுவலகத்திலிருந்து வெறைட்டிஹால் போலீஸ் நிலையம் வரை சுமார் 300 அடி தூரத்துக்கு ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் முகக்கவசம் அணிந்து நின்றனர்.
இதுகுறித்து தபால் அதிகாரிகள் கூறியதாவது:-
டோக்கன் வினியோகம்
தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கினால் தான் நிவாரணத்தொகை செலுத்த முடியும் என்று அரசு அறிவித்ததால் அமைப்புசாரா தொழிலாளர்கள் தினமும் 500 பேருக்கு மேல் இங்கு வருகிறார்கள். ஆதார் கார்டு மற்றும் அமைப்புசாரா துறை வழங்கிய அடையாள அட்டை இருந்தால் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும். ஒரு நாளுக்கு 300 டோக்கன்கள் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் நிற்பவர்களுக்கு டோக்கன் கொடுத்தாலும் அவர்கள் மறுநாள் வந்து சேமிப்பு கணக்கு தொடங்கலாம்.
இங்கு வரும் கூட்டத்தை பார்த்தால் பெரும்பாலானவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்றே தோன்றுகிறது. முதல் நாள் டோக்கன் வாங்கியவர்கள் காலை 10 மணிக்கு முன்பே வந்து வரிசையில் நின்று விடுகிறார்கள். கூட்டத்தை சமாளிப்பதற்காக கூடுதல் பணியாளர்களை நியமித்து சேமிப்பு கணக்கு தொடங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story