நாகர்கோவிலில் வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள், கொல்லங்கோட்டில் களை கட்டியது


நாகர்கோவிலில் வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள், கொல்லங்கோட்டில் களை கட்டியது
x
தினத்தந்தி 20 May 2020 7:46 AM IST (Updated: 20 May 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் டாஸ் மாக் கடைகள் வெறிச்சோடியது. கொல்லங்கோட்டில் மதுபிரியர்கள் கூட்டத்தால் களை கட்டியது.

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் டாஸ் மாக் கடைகள் வெறிச்சோடியது. கொல்லங்கோட்டில் மதுபிரியர்கள் கூட்டத்தால் களை கட்டியது.

டாஸ்மாக் கடை திறப்பு

கொரோனா தொற்று இந்தியாவில் பரவ தொடங்கியதை தொடர்ந்து மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 43 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் கடந்த 7-ந்தேதி திறக்கப்பட்டு 2 நாட்கள் மட்டுமே விற்பனை நடந்தது. நிபந்தனைகளை பின்பற்றவில்லை என கூறி மதுக்கடைகளை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதோடு, ஆன்லைனில் மட்டுமே மது விற்பனை செய்ய அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மீண்டும் 16-ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.

வெறிச்சோடியது

குமரி மாவட்டத்தில் 16-ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறந்த பிறகு நாகர்கோவில் உள்பட குமரி கிழக்கு மாவட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நாகர்கோவிலில் நேற்று ஏராளமான கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மதுபிரியர்கள் அதிகமானவர்கள் வருவார்கள். அவ்வாறு சேரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு டாஸ்மாக் கடையின் முன்பும் கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால், டாஸ்மாக் கடைகள் முன் கட்டப்பட்டு இருந்த தடுப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

‘களை‘ கட்டியது

ஆனால் குமரி மேற்கு மாவட்டத்தில் அதாவது குறிப்பாக கொல்லங்கோடு பகுதி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அதிக அளவு உள்ளது. கொல்லங்கோடு கண்ணனாகம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை நேற்று ‘களை‘ கட்டியது. முதல் நாளன்று மது வாங்க வந்தவர்களின் கூட்டத்தை போல் நேற்றும் கூட்டம் அலை மோதியது. முதல் 2 நாட்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நின்றவர்கள் நேற்று ஒருவரை மற்றவர் தொடும் அளவுக்கு சமூக இடைவெளி இல்லாமல் நின்றதை காண முடிந்தது. உடனே போலீசார் அவ்வாறு நின்றவர்களை சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்குமாறு கூறியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குமரி-கேரள எல்லையில் ஊரம்பு பகுதியில் டாஸ்மாக் கடைகள் நேற்று திறந்த ½ மணி நேரத்தில் மூடப்பட்டதால், அங்கு வரிசையில் நின்றவர்கள் நேராக கண்ணனாகம் கடைக்கு வாங்க வந்தனர். இதனால் மது வாங்க நீண்ட வரிசை காணப்பட்டது.

Next Story