குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நடவடிக்கை கலெக்டரிடம், எச்.வசந்தகுமார் எம்.பி.,-2 எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்


குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நடவடிக்கை கலெக்டரிடம், எச்.வசந்தகுமார் எம்.பி.,-2 எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 May 2020 2:41 AM GMT (Updated: 20 May 2020 2:41 AM GMT)

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம், வசந்தகுமார் எம்.பி. மற்றும் 2 எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம், வசந்தகுமார் எம்.பி. மற்றும் 2 எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கலெக்டருடன் சந்திப்பு

குமரி மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் புயலின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாகவும், அவற்றை சீரமைப்பது குறித்தும் வசந்தகுமார் எம்.பி. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), பிரின்ஸ் (குளச்சல்) ஆகியோர் நேற்று இரவு நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரேவைச் சந்தித்து பேசினர். பின்னர் 3 பேரும் வெளியே வந்தனர். எச்.வசந்தகுமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆரோக்கியபுரத்தில் இருந்து நீரோடி வரை உள்ள மீனவ கிராமங்கள், எப்போது மழை வந்தாலும், காற்று வீசினாலும் பாதிக்கப்படுகிறார்கள். புத்தன்துறையில் இருந்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொகுதி வரையில் சின்ன, சின்ன உடைப்புகள் இருக்கிறது. கடந்த முறை கலெக்டர் உத்தரவின்பேரில் ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பில் சீரமைப்பு மேற்கொள்ள கணக்கெடுத்தார்கள். அந்த பணிகள் இன்னும் செய்யப்படவில்லை. அதை கலெக்டரிடம் நினைவுபடுத்தினோம்.

நேற்று (அதாவது நேற்று முன்தினம்) வீசிய சூறைக்காற்றில் லட்சக்கணக்கான வாழைகள் சரிந்து கிடக்கின்றன. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க வேண்டும்.

15 வீடுகள் பாதிப்பு

கடந்த ஆண்டில் காற்றில் விழுந்த வாழைகளுக்கும் நிவாரணம் வழங்கவில்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள். அதையும் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கூறினோம். குறிப்பாக பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொகுதிக்கு உட்பட்ட குறும்பனை பகுதியைச் சென்று பார்த்தோம். அப்பகுதியில் 15 வீடுகள் இடியும் நிலையில் உள்ளன.

எனவே அரசு, மாவட்ட கலெக்டர் தலைமையில் அங்கு சென்று பார்த்து உடனடியாக செயல்பட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு எச்.வசந்தகுமார் எம்.பி. கூறினார்.

நிதி ஒதுக்கீடு

முன்னதாக கலெக்டரை சந்தித்தபோது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:- கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 கடற்கரை கிராமங்களான குறும்பனை, மிடாலம், மேல்மிடாலம், கலாம்நகர், இனயம், இனயம்புத்தன்துறை, ராமன்துறை, முள்ளூர்துறை, தேங்காப்பட்டணம், இரையுமன்துறை, பூத்துறை, சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, நீரோடித்துறை ஆகிய கிராமங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கடலரிப்பு தடுப்புச் சுவர்கள், தூண்டில் வளைவுகளும் கடல் சீற்றத்தின் காரணமாக பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இந்த உடைப்புகளின் வழியாக கடல் சீற்றத்தின்போது கடல்நீர் புகுந்து வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்படுகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் கடலோர வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு சேதம் அடைந்துள்ள கடலரிப்பு தடுப்புச் சுவர்களையும், தூண்டில் வளைவுகளையும் உடனடியாக ஆய்வு செய்து மறுசீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கடலோர மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story