ஊரடங்கு நீட்டிப்பு: அம்மா உணவகங்களில் 31-ந்தேதி வரை இலவச உணவு
ஊரடங்கு நீட்டிப்பையொட்டி அம்மா உணவகங்களில் வருகிற 31-ந்தேதி வரை இலவச உணவு வழங்க நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா ஏற்பாடு செய்து உள்ளார்.
பேட்டை,
ஊரடங்கு நீட்டிப்பையொட்டி அம்மா உணவகங்களில் வருகிற 31-ந்தேதி வரை இலவச உணவு வழங்க நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா ஏற்பாடு செய்து உள்ளார்.
அம்மா உணவகங்கள்
நெல்லை மாநகரில் 11 அம்மா உணவகங்கள் உள்ளன. இங்கு ஏழை, எளிய மக்களுக்காக மிகவும் குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் கடந்த 17-ந்தேதி வரை காலை, மதியம் மற்றும் மாலையில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வருகிற 31-ந்தேதி வரை 4-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதையொட்டி தொடர்ந்து ஏழை மக்கள் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வாங்கி சாப்பிடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை தச்சை கணேசராஜா செய்தார். அதன்படி நேற்று பேட்டை அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவச உணவை வழங்கி தொடங்கி வைத்தார்.
7 லட்சம் மக்கள்
இதுகுறித்து தச்சை கணேசராஜா கூறுகையில், “கொரோனா வைரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையொட்டி கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட அம்மா உணவகங்களில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதல்படி இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 59 நாட்களில் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதன்மூலம் பயன் அடைந்து உள்ளனர். மேலும் வருகிற 31-ந்தேதி வரை 11 அம்மா உணவங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அ.தி.மு.க. கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏழை மக்களுக்கு கொரோனா கால நிவாரணமாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை தச்சை கணேசராஜா வழங்கினார்.
Related Tags :
Next Story