டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’


டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 20 May 2020 4:04 AM GMT (Updated: 20 May 2020 4:04 AM GMT)

சேலம் சரகத்தில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்ற 9 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.


சேலம்,

சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில மருந்து கடைகளில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவைகளுக்கு டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்கப்படுவதாக சேலம் மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. 

இதையடுத்து மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் குருபாரதி உத்தரவின்பேரில் அந்தந்த மாவட்ட மருந்து கட்டுப்பாடு இன்ஸ்பெக்டர்கள் கடந்த சில நாட்களாக மருந்து கடைகளில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது சேலத்தில் 3 மருந்து கடைகளும், நாமக்கல், ஓசூர் ஆகிய இடங்களில் தலா 2 மருந்துக்கடைகள், அரூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் ஒரு மருந்து கடைகள் என 9 மருந்து கடைகளில் டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களுக்கு மருந்துகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். 

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தற்போது கொரோனோ தடுப்பு பணிகள் நடந்து வருவதால் காய்ச்சல், சளி, இருமலுக்கு மருந்து கடைகளில் டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஆகையால் இதை மீறி மருந்து கடைகளில் மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story