ஊரடங்கில் இருந்து மீண்ட விவசாயிகளை முடக்கி ப்போட்ட சூறைக்காற்று
விருத்தாசலம் பகுதியில் வீசிய சூறைக்காற்றால் பல ஏக்கரில் முந்திரி, பலா மரங்கள் முறிந்து விழுந்தன. ஊரடங்கில் இருந்து மீண்ட விவசாயிகளின் வாழ்க்கையை சூறைக்காற்று முடக்கி போட்டு சென்று விட்டது.
விருத்தாசலம்,
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள உம்பன் புயல் காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. இதில் விருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்த மழையின் போது, வீசிய சூறைக்காற்றால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியதுடன், விவசாயிகளின் வாழ்க்கையும் இருளாகி விட்டது.
இதில் விருத்தாசலம் பகுதி விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது முந்திரி, பலா, வாழை, முருங்கை ஆகும். ஆனால் நேற்று முன்தினம் வீசிய சூறைக்காற்றில் விருத்தாசலம் நகரம், குப்பநத்தம், காணாது கண்டான், கண்டியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக இந்த பகுதியில் உள்ள முந்திரி, பலா, வாழை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.
இது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. ஏனெனில் கொரோனா பாதிப்பால் வீட்டுக்குள் முடங்கிய விவசாயிகள் தற்போது மெல்ல மீண்டு வரும் சூழலில், இந்த சூறைக்காற்று அவர்களது வாழ்க்கையை மேலும் புரட்டி போட்டு மீண்டும் முடக்கி சென்றுவிட்டது. ஏற்கனவே பலா அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் அறுவடை செய்ய முடியாமல் போனது. இதனால் பழங்கள் மரத்திலேயே கனிந்து வீணாகி போனது.
இதுபோன்ற சூழலில் தற்போது ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளால், விவசாயிகள் தங்களது பணியை தொடங்கினர். தொடங்கிய சில தினங்களிலேயே சூறைக்காற்று, அவர்களது வாழ்க்கையை மீண்டும் முடக்கி போட்டு விட்டது. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் அளவில் மரங்கள் சேதமடைந்து இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது பருவகாலமான மா, பலா, முந்திரி மரங்கள் அடியோடு சாய்ந்ததினால், அனைத்து விளைச்சலும் பாழாய் போய்விட்டதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். மேலும் முந்திரி, பலா, வாழை அனைத்தும் தோட்டக்கலைத் துறைக்கு சம்பந்தப்பட்ட பயிர்கள் என்பதால், தோட்டக்கலை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, உரிய கணக்கெடுப்பு நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு விவசாயிகளின் வாழ்வில் இருளை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி பல கிராமங்களையும் இருளில் மூழ்கச் செய்து சென்று விட்டது இந்த சூறைக்காற்று. விருத்தாசலம் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்கம்பங்கள் பல இடங்களில் விழுந்தன. மேலும் மின்கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்ததால் நேற்று முன்தினம் மாலை முதல் மின்தடை ஏற்பட்டது. நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்து மின் வினியோகம் செய்தனர். காலை 11 மணிக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக மின்வினியோகம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story