இணையவழியில் கோவில் கட்டிடக்கலை பயிற்சி


இணையவழியில் கோவில் கட்டிடக்கலை பயிற்சி
x
தினத்தந்தி 20 May 2020 11:13 AM IST (Updated: 20 May 2020 11:13 AM IST)
t-max-icont-min-icon

கோவில் கட்டிடக்கலை குறித்து இணையவழியில் பயிற்சியை ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகமும், தொல்லியல் ஆய்வு நிறுவனமும் நடத்தின.

ராமநாதபுரம், 

அருங்காட்சியகத்தின் முக்கியத்துவத்தினை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 18-ந்தேதியன்று சர்வதேச அருங்காட்சியக தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை 1977-ம் ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக சங்கம் நடத்துகிறது. சமத்துவத்திற்கான அருங்காட்சியகங்கள் அதன் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் என்பது 2020-ம் ஆண்டிற்கான கருப்பொருளாகும். கொரோனா ஊரடங்கு காரணமாக சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு இந்தாண்டு கோவில் கட்டிடக்கலை ஓர் அறிமுகம் என்ற பயிற்சி முகாம் இணையவழியில் நடத்த திட்டமிடப்பட்டது.

இதன்படி ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகமும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து வாட்ஸ்-அப் மூலம் 10 நாட்கள் இப்பயிற்சியை நடத்தின. பயிற்சியை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு நடத்தினார். கோவில்களின் தோற்றம், அதன் அமைப்பு, விமானம், கோபுரம் இவற்றின் உறுப்புகள் அவற்றின் வகைகளை பாண்டிய நாடு, சோழநாட்டு கோவில்களின் 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன் விளக்கிக்கூறினார்.

பங்கேற்பு

இந்த பயிற்சியில் கோவில் படங்களில் அதன் உறுப்புகளின் பாகங்கள் குறித்து விளக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டவற்றில் இருந்து வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது. கோவிலின் பாகங்களை வரைந்து அவற்றின் பெயர்களை குறித்தல், கோவில் அமைப்பை விளக்கி கட்டுரை எழுதுதல் ஆகிய செயல்பாடுகளில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று பயின்றனர்.

இப்பயிற்சியில் திருப்புல்லாணி, ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மகளிர் கல்லூரி மாணவி, பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற கப்பல் படை அதிகாரி, தொல்லியல் ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அடுத்த கட்டமாக தமிழ் பிராமி கல்வெட்டுகள் படிக்கும் பயிற்சியும் இணைய வழியில் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவகுமார் தெரிவித்தார்.

Next Story