கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறப்பு முடி திருத்த காத்திருந்த மக்கள்
கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. முடி திருத்த மக்கள் காத்திருந்தனர்.
புதுக்கோட்டை,
கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. முடி திருத்த மக்கள் காத்திருந்தனர்.
சலூன் கடைகள் திறப்பு
கொரோனாவின் தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் சலூன் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கிராமப்புறங்களில் மட்டும் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று முதல் சலூன் கடைகள் திறக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சலூன் கடைகளை அதன் உரிமையாளர்கள் திறந்தனர். கடைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர். மேலும் முடி திருத்தும் தொழிலாளர்கள் கையில் கையுறையும், முக கவசமும் அணிந்து பணிபுரிந்தனர். முடி திருத்துவதற்காக பலர் வரிசையில் கடை முன்பு காத்திருந்தனர். கிராமப்புறங்களில் கடைகள் பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவில் உள்ளதால் ஒருவருக்கு முடி திருத்தும் வரை மற்றவர்கள் காத்திருந்தனர். ஒரு சில கடையில் ஒரே ஒரு சேர் மட்டும் இருந்ததை காணமுடிந்தது.
நகர்ப்புற மக்கள்...
புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் முடி திருத்தும் கடை ஒன்றில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முடி திருத்துவதற்காக அமர்ந்திருந்தனர். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று முடி திருத்தம் செய்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாவட்ட தலைவர் கணபதி கூறுகையில், “மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் சலூன் கடைகள் உள்ளன. இதில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 3 ஆயிரம் கடைகள் திறக்கப்படவில்லை. கிராமப்புறங்களில் மட்டும் அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றி முடி திருத்தம் செய்யப்படுகிறது. இதே நடைமுறையை பின்பற்றி நகர்ப்புறங்களில் உள்ள சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.
கீரனூர், அன்னவாசல்
கீரனூரை அடுத்த குளத்தூர், அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் சலூன்கடை திறக்கப்பட்டது. கடைகளில் உரிமையாளர் முக கவசம், கையுறை அணிந்து கொண்டு பொதுமக்களுக்கு முடி திருத்தம் செய்தனர்.
Related Tags :
Next Story