கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறப்பு முடி திருத்த வருபவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டுகோள்


கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறப்பு முடி திருத்த வருபவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 May 2020 6:32 AM GMT (Updated: 20 May 2020 6:32 AM GMT)

கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முடி திருத்த வருபவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என முடி திருத்துபவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரம்பலூர், 

கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முடி திருத்த வருபவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என முடி திருத்துபவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சலூன் கடைகள் திறப்பு

கொரோனாவின் தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் சலூன் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கிராமப்புறங்களில் மட்டும் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று முதல் சலூன் கடைகள் திறக்கப்பட்டன.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் சலூன் கடைகளை அதன் உரிமையாளர்கள் திறந்தனர். பின்னர் கடைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர். மேலும் முடி திருத்தும் தொழிலாளர்கள் கையில் கையுறையும், முக கவசமும் அணிந்து பணிபுரிந்தனர். முடி திருத்துவதற்காக பலர் வரிசையில் கடை முன்பு காத்திருந்தனர். கிராமப்புறங்களில் கடைகள் பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவில் உள்ளதால் ஒருவருக்கு முடி திருத்தும் வரை மற்றவர்கள் காத்திருந்தனர். ஒரு சில கடையில் ஒரே ஒரு நாற்காலி மட்டும் இருந்ததை காணமுடிந்தது.

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று முடி திருத்தம் செய்தனர்.

அச்சத்துடன் வருகிறார்கள்

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள ஒரு சலூன் கடை உரிமையாளர் குமார் கூறுகையில், கிராமப்புறங்களில் சலூன் கடை தொழில் செய்து குடும்பம் நடத்துவது சாதாரண விஷயமல்ல. போதிய வருவாய் இல்லாமல் சிரமத்துடன் குடும்பம் நடத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு காரணமாக கடையை மூடி தொழில் செய்யாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி, பொருளாதார ரீதியில் மிகுந்த பாதிப்பை உண்டாக்கியது.

மேலும் தற்போது கிராமப்புறங்களில் சலூன் கடை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் நாங்கள் முக கவசம், கையுறை அணிந்து கடைகளில் கிருமி நாசினி தெளித்து மிகுந்த பாதுகாப்புடன் முடிவெட்டும் தொழிலை செய்து வருகிறோம். தற்போது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகுந்த அச்சத்துடன் வருகிறார்கள். இதனால் தற்போது வாடிக்கையாளர்களின் வருகை குறைவாக உள்ளது. வரும் காலங்களில் இது சரியாகும் என நம்புகிறோம் என்றார்.

ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதியான, மீன்சுருட்டி பகுதியில் உள்ள பெரும்பாலான சலூன் கடைகள் திறக்க வில்லை. ஒரு சில சலூன் கடைகள் மட்டுமே நேற்று திறந்து வைக்கப்பட்டன. அதில் ஒரு சலூன் கடை உரிமையாளர் சிவா கூறுகையில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் நாங்கள் கடை வாடகை, மின்சார கட்டணம் ஆகியவை கட்ட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கடை வாடகை சுமார் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை கொடுக்க வேண்டி உள்ளது. அதேபோல் மின்சார கட்டணம் சுமார் ரூ.3 ஆயிரம் வரை கட்ட வேண்டி சூழ்நிலையில் உள்ளோம். அரசு அறிவித்த ரூ.2 ஆயிரத்தை ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும். எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்குக்கு முன்னர் சாதாரணமாகவே கடை வாடகை மற்றும் மின்சார கட்டணம் கட்ட முடியாமல் முடி திருத்தம் செய்து வந்தோம். கடந்த 2 மாத காலமாக ஊரடங்கு காரணமாக முடிதிருத்தம் செய்ய முடியாமலும், ஏற்கனவே குடும்ப செலவுக்கு வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறி வருகின்றோம். எங்களுடைய குடும்பங்கள் வறுமையில் இருந்து வருகிறது.

இன்று (அதாவது நேற்று) முதல் ஊரக பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் திறக்கலாம் என முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் பொது மக்கள் சாதாரண நாட்களில் வருவது போல வரவில்லை. காலை 7 மணியளவில் கடை திறந்து வைத்தேன். தற்போது மணி 2 இதுவரை ஒருவருக்கு மட்டுமே சிகையலங்காரம் செய்து உள்ளேன். பொதுமக்கள் சலூன் கடைக்கு வரவே கொரோனா அச்சத்தில் உள்ளனர். இந்த இழப்பில் இருந்து நாங்கள் மீள்வதற்கு சுமார் 2 ஆண்டுகள் ஆகும் என்றார்.

கொரோனாவை விரட்ட வேண்டும்

அரியலூர் மாவட்டம், திருமழபாடி கிராமத்தில் சலூன் கடை நடத்தி வரும் கலைஞன்(வயது 36) என்பவர் கூறுகையில், தமிழக அரசு ஊரகப்பகுதிகளில் உள்ள சலூன் கடைகளை திறக்க அனுமதி அளித்ததற்கு மிக்க நன்றி. நகர்ப்புறங்களில் கடை நடத்திவரும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். 2 மாதம் எந்த வருமானமும் இன்றி கடை வாடகை செலுத்த வேண்டியுள்ளது.

ஆகையால் நகர்ப்புறங்களில் உள்ள சலூன் கடைகளையும் கூடிய விரைவில் திறக்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் தொழிலாளர் சமுதாயத்திற்கு அரசு அளித்த எந்த ஒரு நிதி உதவியும் யாருக்கும் வந்து சேரவில்லை. அதனை அரசு கவனிக்க வேண்டும்.

மேலும் இந்த கொரோனா நேரத்தில் மக்களாகிய நாம்தான் சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனாவை விரட்ட வேண்டும். ஆகையால் முடி திருத்த வருபவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக வந்து எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Next Story