திருமானூர் அருகே துணை மின் நிலையத்தில் பயங்கரம்: மின் ஊழியர் கழுத்தறுத்து கொலை 2 மகன்கள் கைது; பரபரப்பு வாக்குமூலம்
திருமானூர் அருகே மின் ஊழியரை கழுத்தை அறுத்து கொலை செய்த அவரது 2 மகன்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கீழப்பழுவூர்,
திருமானூர் அருகே மின் ஊழியரை கழுத்தை அறுத்து கொலை செய்த அவரது 2 மகன்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மின் பாதை ஆய்வாளர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தை சேர்ந்தவர் கனகசபை (வயது 50). இவர் கீழையூர் கிராமத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி அஞ்சம்மாள் (50) என்பவருக்கு கமலா (30) என்ற மகளும், கலைச்செல்வன் (27), கலைவாணன் (21) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். 2-வது மனைவி சங்கீதாவிற்கு, தினகரன் (20), தினேஷ்குமார் (16) என்ற இரு மகன்களும், திவ்யா (18) என்ற மகளும் உள்ளனர்.
கனகசபைக்கு முதல் மனைவி அஞ்சம்மாளுடன் வாழ விருப்பம் இல்லாமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது கனகசபை தனது 2-வது மனைவி சங்கீதாவுடன் திருமழபாடி கிராமத்தில் வசித்து வருகிறார்.
கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வேலைக்கு சென்றார். அங்கு துணை மின் நிலைய கட்டுப்பாட்டு அறையில் அவர் பணியாற்றி கொண்டிருக்கும்போது மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் கனகசபையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். அவர் இறந்ததை உறுதி செய்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
நேற்று காலை 6 மணி அளவில் பணிக்கு வந்த மற்றொரு மின் ஊழியர் கட்டுப்பாட்டு அறைக்குள் சென்று பார்த்தார்.
அப்போது கனகசபை உடலில் எந்த துணியும் இன்றி நிர்வாணமாக கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து உடனே கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனையிட்டனர்.
2 மகன்கள் கைது
மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் கனகசபையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில், கனகசபையின் 2-வது மனைவி சங்கீதாவிடம் முதலில் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது மகன்களான கலைச்செல்வன், கலைவாணன் ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் தங்களது தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்ட விவரம் வருமாறு:-
எங்களது தாய் அஞ்சம்மாளை, கனகசபை விவாகரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் நாங்கள் எங்களுக்கு ஜீவனாம்சம் தாருங்கள் என்று கேட்டோம். ஆனால் அதற்கு அவர், ஏற்கனவே உங்களுக்கு அதிகமாக செய்துவிட்டேன். இனிமேல் என்னால் எதும் தரமுடியாது என்று கூறிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் 2 பேரும் சேர்ந்து எங்களது தந்தையை கொலை செய்தோம் என்று கூறினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பதவி உயர்வு
இதுகுறித்து அவர் உடன் பணியாற்றும் ஊழியர்களிடம் கேட்டபோது, உயிரிழந்த கனகசபைக்கு இன்னும் 2 நாட்களில் ஆக்க முகவராக (போர்மேன்) பதவிஉயர்வு வர இருந்த இந்த நேரத்தில் இவருக்கு இப்படி நடந்துவிட்டது. இந்த துணை மின் நிலையத்தில் காலை, மாலை, இரவு என 3 வேளையுமே ஒரு ஊழியர் தான் பணியாற்றுவோம். உதவி பணியாளர்கள் கூட கிடையாது. உதவி பணியாளர்கள் கேட்டு அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை. உதவி பணியாளர் இருந்திருந்தால் இந்த கொலை நடந்து இருக்க வாய்ப்பு குறைவாக இருந்திருக்கும். அக்கம் பக்கத்தில் வேறு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு எந்த குடியிருப்புகளும் இல்லை. முற்றிலும் காடுகளாகத்தான் காட்சி அளிக்கின்றன, என்றனர்.
Related Tags :
Next Story