ஊரடங்கால் கர்நாடக மாநிலத்தில் தவித்த 44 கட்டிட தொழிலாளர்கள் பஸ்களில் வேலூர் திரும்பினர்
ஊரடங்கால் கர்நாடக மாநிலத்தில் சிக்கி தவித்த 44 கட்டிட தொழிலாளர்கள் பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
வேலூர்,
ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கல்வி, வேலை, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களால் வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழக மக்களை சொந்த ஊருக்கு அழைத்து வரும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
இவ்வாறாக வெளிமாநிலங்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள். கடந்த 15-ந் தேதி குஜராத்தில் இருந்து பஸ் மூலம் வேலூருக்கு வந்த 15 பேர் தனியார் கல்லூரியில் உள்ள சிறப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அணைக்கட்டு அருகேயுள்ள பீஞ்சமந்தை உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களை சேர்ந்த 44 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டிட வேலைக்காக கர்நாடக மாநிலம் சிக்மகளூர் சென்றனர். அங்கு அவர்கள் தங்கியிருந்து கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர். ஊரடங்கால் வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்த அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப போக்குவரத்து வசதியில்லாமல் சிக்கி தவித்தனர்.
இந்த நிலையில் 44 பேரும் சிக்மகளூருவில் இருந்து 2 பஸ்களில் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட எல்லைப்பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர்களுக்கு அறிகுறி இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அனைவரும் அரசு பஸ்களில் சிக்மகளூரிலிருந்து சொந்த ஊருக்கு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு வீடுகளில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு சளிமாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story