கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை நாளை முதல் தொடங்குகிறது


கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை நாளை முதல் தொடங்குகிறது
x
தினத்தந்தி 21 May 2020 5:15 AM IST (Updated: 21 May 2020 1:42 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை நாளை(வெள்ளிக்கிழமை)முதல் தொடங்குகிறது.

பெங்களூரு,

ஊரடங்கினால் நாடு முழுவதும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை நாளை(வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏறத்தாழ 55 நாட்களுக்கு பிறகு கர்நாடகத்தில் கடந்த 19-ந் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பஸ், ஆட்டோ, ரெயில் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பஸ், ஆட்டோ, வாடகை கார்கள் சேவையை தொடங்கிவிட்டன.

ரெயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது. மாநில அரசின் அனுமதி குறித்து ஆலோசித்து வருவதாக ரெயில்வே அதிகாரிகள் கூறினர். இந்த நிலையில் 22-ந் தேதி (நாளை) முதல் பயணிகள் ரெயில்களை இயக்குவதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஊரடங்கினால் நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில் சேவை நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் ரெயில் சேவை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பெங்களூரு-பெலகாவி (வண்டி எண்: 02079/02080), பெங்களூரு-மைசூரு (06503/06504) இடையே பயணிகள் சிறப்பு ரெயில் தொடங்கப்படுகிறது. 22-ந் தேதி முதல் (நாளை) இந்த ரெயில் சேவை இயக்கப்படு கிறது.

பெங்களூரு-பெலகாவி (02079) அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் இயங்குகிறது. பெங்களூருவில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், மாலை 6.30 மணிக்கு பெலகாவியை சென்றடைகிறது.

மறுமார்க்கமாக பெலகாவி-பெங்களூரு (02080) அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் 23-ந்தேதி முதல் வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் இயங்குகிறது. இந்த ரெயில் பெலகாவியில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு பெங்களூருவை மாலை 6.30 மணிக்கு வந்தடைகிறது.

இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும், யஷ்வந்தப்பூர், துமகூரு, அரசிகெரே, பிருர், சிக்ஜார், தாவணகெரே, ஹரிஹர், ராணிபென்னூர், ஹாவேரி, உப்பள்ளி, தார்வார் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதே போல் பெங்களூரு-மைசூரு (06503) சிறப்பு ரெயில் நாளை முதல் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயங்குகிறது. பெங்களூருவில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் ரெயில், மதியம் 12.45 மணிக்கு மைசூருவை சென்றடைகிறது.

மறுமார்க்கமாக மைசூரு- பெங்களூரு (06504) சிறப்பு ரெயில் நாளை மதியம் 1.45 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு பெங்களூருவை வந்தடைகிறது. இந்த ரெயிலும் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர 6 நாட்கள் இயங்குகிறது. இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் கெங்கேரி, ராமநகர், மத்தூர், மண்டியா, பாண்டவபுரா, நாகனஹள்ளி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Next Story