ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோலார் பம்புசெட்-மின்வேலி அமைக்க விவசாயிகளுக்கு மானியம்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோலார் பம்புசெட்-மின்வேலி அமைக்க விவசாயிகளுக்கு மானியம்
x
தினத்தந்தி 20 May 2020 11:30 PM GMT (Updated: 20 May 2020 8:50 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோலார் பம்புசெட், சூரிய மின் வேலி அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக, வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை,

தமிழகத்தில் மின்சார உபயோகத்தைக் குறைக்கவும், இலவச மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் விவசாயிகளின் நலனுக்காகவும் தமிழக அரசு சூரிய ஒளியால் இயங்கும் சோலார் பம்பு செட் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் 5 எச்பி, 7.5 எச்பி, 10 எச்பி திறன் கொண்ட சோலார் பம்பு செட்டுகளை 70 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு அமைத்துக் கொடுக்கப்படும்.

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு நடப்பு ஆண்டுக்கு 233 எண்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 31 சோலார் பம்பு செட்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. சோலார் பம்பு செட் அமைப்பதற்கான நிறுவனங்கள் மற்றும் விலை விவரங்கள் சென்னை வேளாண்மைப் பொறியியல் துறை தலைமை பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விவசாயிகளின் நிலங்களில் விலங்குகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் தமிழக அரசு 50 சதவீத மானியத்தில் சூரிய மின் வேலி அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் தனி நபர் விவசாய நிலங்களில் 50 சதவீத மானியத்தில் சூரிய மின் வேலி அமைத்துக் கொள்ளலாம். ஒரு விவசாயிக்கு அதிகப்பட்சமாக 2 ஹெக்டேர் பரப்பு அல்லது 1245 மீட்டர் சூரிய மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.

சூரிய மின் வேலி அமைப்பதற்கான செலவு தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் மானியம் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் வாலாஜாவில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அணுகி விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story