புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பதால் இ- டோக்கன் திட்டம் கைவிடப்பட்டது
புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க உள்ளதால் இ- டோக்கன் மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று மது விற்கும் திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது
புதுச்சேரி,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதில் ஒரு அம்சமாக தமிழகம், புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப் படாததால் மதுக்கடைகளை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டதையடுத்து மதுக்கடைகள் திறக்கப்பட்டு தமிழகத்தில் மது பாட்டில்கள் விற்கப்பட்டு வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டில் அரசு அப்பீலுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் ஆன்லைன் மூலமாக மதுபானங்களை விற்க தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது.
தமிழகத்தை பின்பற்றி புதுவை மாநிலத்திலும் ஆன்லைன் மூலமாக இ- டோக்கன் மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று மது பாட்டில்களை விற்க அரசு திட்டமிட்டது. இதற்காக புதுவை அரசு பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் செயல்பட்டு வரும் கலால் துறை சார்பில் புதிதாக இ-டோக்கன் வழங்கி மதுபானங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவின் பெயரில் புதிதாக ஒரு இணையதளமும் உருவாக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தால் உடனடியாக புதுவை மாநிலத்தில் இந்த திட்டத்தை தொடங்கி மதுபானங்கள் விற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியதால் புதுவை மாநிலத்திலும் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்தது. அதற்காக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அந்த கோப்பு கவர்னர் கிரண்பெடியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒப்புதல் கிடைக்காததால் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தும் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலை இருந்து வருகிறது. கவர்னரின் அனுமதி கிடைத்ததும் புதுவையில் மதுக்கடைகள் திறக்கப்படும். எனவே ஆன்லைன் மூலமாக மதுபானம் விற்பனை செய்வதற்கு இ-டோக்கன் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது.
எனவே இதற்காக உருவாக்கப்பட்ட இணையதளம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அருணிடம் கேட்டபோது, ‘புதுவை மாநிலத்தில் ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்ய திட்டம் வந்தால் அதனை செயல்படுத்துவதற்காக இ-டோக்கன் வழங்கும் இணையதளம் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மதுக்கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story