அமராவதி அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறப்பு
அமராவதி அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தளி,
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளை ஆதாரமாகக்கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு பாம்பாறு, தேனாறு, சின்னாறு, கல்லாறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அதை அடிப்படையாக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அணைக்கு ஏற்படுகின்ற நீர்்வரத்தை மற்றும் நீர்இருப்பை பொறுத்து பாசன நிலங்களுக்கு தண்ணீர்் வினியோகம் செய்யப்படுகிறது. அமராவதிஅணையில் இருந்து ஆற்றில் திறக்கப்படுகின்ற தண்ணீர் குதிரையாறு நங்காஞ்சியாறு, பாலாறு, புறந்தலாறு, நல்லதங்காள் ஓடை போன்ற துணை நதிகளுடன் இணைந்து சுமார் 220 கிலோமீட்டர் தூரம் பயணித்து கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் காவிரியுடன் கலக்கிறது. இந்த பயணத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களின் பாசனத்தேவையையும், நூற்றுக்கணக்கான கிராமங்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது.
கடும் வறட்சி
இந்த நிலையில் கடந்த ஆண்டு மேற்கு தொடர்்ச்சி மலைகளில் பருவமழை தீவிரமடைந்தது. இதன்காரணமாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அமராவதிஅணைக்கு தொடர் நீர்வரத்து இருந்து வந்ததால் அணையின் நீர்்மட்டம் வேகமாக உயர்ந்து முழுகொள்ளளவை நெருங்கியது.
அதைத்தொடர்ந்து அமராவதி அணையில் இருந்து புதிய மற்்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் பருவமழைக்கு பின்பு அணையின் நீராதாரங்களில் அளவு மழை பெய்யவில்லை. மாறாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் அணைக்கு ஆறுகள் மூலமாக வந்து கொண்டிருந்த நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்று விட்டது.
ஊரடங்கு உத்தரவு
மறுபுறம் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்இருப்பும் சரிந்து விட்டது. அதன் பின்பு நீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் உயருவதற்கான வாய்ப்புகள் ஏற்படவில்லை. இதனால் அணைப்பகுதி மணல் திட்டுகளாகவும் பாறைகளாகவும் வறண்டநிலமாகவும் காட்சி அளித்து வருகிறது.
மேலும் இந்த ஆண்டு அமராவதி அணையின் பாசன பரப்புகளில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் அமராவதி ஆறு வறண்ட நிலையில் காணப்படுவதுடன் ஆற்றை பிரதானமாகக் கொண்டுள்ள குடிநீர் திட்டங்களும் முடங்கிப் போயுள்ளது. இந்த சூழலில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
குடிநீருக்கு திறப்பு
இதனால் தண்ணீர் தேவையும் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களும் தேவையான அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் நேற்று காலை 7 மணியளவில் அமராவதி ஆற்றில் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 3 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று வினாடிக்கு 1000 கனஅடியும் இன்று (வியாழக்கிழமை) வினாடிக்கு 800 கனஅடியும் நாளை (வெள்ளிக்கிழமை) வினாடிக்கு 550 கனஅடியும் ஆக மொத்தம் 2350 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வருகின்ற 23 ம் தேதி காலை 7 மணிக்கு தண்ணீர் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை
மேலும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி தேவையை பூர்த்தி செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமராவதி அணையின் உயரம் 90 அடியாகும் நேற்றைய நிலவரப்படி அணையில் 31.86 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
Related Tags :
Next Story