கொரோனாவை தடுப்பதில் உத்தவ் தாக்கரே அரசு தோல்வி அடைந்து விட்டது கேரளாவுடன் ஒப்பிட்டு சந்திரகாந்த் பாட்டீல் தாக்கு


கொரோனாவை தடுப்பதில் உத்தவ் தாக்கரே அரசு தோல்வி அடைந்து விட்டது கேரளாவுடன் ஒப்பிட்டு சந்திரகாந்த் பாட்டீல் தாக்கு
x
தினத்தந்தி 20 May 2020 11:21 PM GMT (Updated: 20 May 2020 11:21 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா பரவலை தடுப்பதில் உத்தவ் தாக்கரே அரசு தோல்வி அடைந்து விட்டதாக கேரளாவுடன் ஒப்பிட்டு மாநில பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டிய பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மராட்டியம் தனது முதல் கொரோனா நோயாளியை மார்ச் 9-ந் தேதி கண்டறிந்து அறிவித்தது. இப்போது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை எட்டியுள்ளது.

அதே காலக்கட்டத்தில் தான் கேரளாவிலும் கொரோனா தாக்கம் ஏற்பட்டது. ஆனால் கடந்த 70 நாட்களில் அங்கு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் தான் இருக்கிறது. இறப்பு 12-க்கும் குறைவாக தான் உள்ளது.

ஆனால் மராட்டியத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1,300 ஐ தாண்டியுள்ளது. இது உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் தோல்வியை அடிகோடிட்டு காட்டுகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நிவாரண தொகுப்பை அறிவிக்கவும் இந்த அரசு தவறி விடடது.

போராட்டம்

கொரோனா நோய் நெருக்கடியை கருத்தில் கொண்டு ஆரம்பத்தில் பாரதீய ஜனதாவும், மக்களும் அரசாங்கத்தை ஆதரிக்க முடிவு செய்திருந்தனர்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அரசுக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதை எங்களால் தடுக்க முடியாது.

இந்த பிரச்சினையில் பாரதீய ஜனதாவும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க கடமைப்பட்டுள்ளது. 22-ந் தேதி (நாளை) மாநிலத்தில் மராட்டியத்தை காப்பாற்றுங்கள் (மகாராஷ்டிரா பச்சாவ்) போராட்டம் நடத்தப்படும். இதன்படி அன்றைய தினம் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து, கருப்பு முககவசங்களை அணிந்து கொண்டும், கண்டன வாசகங்கள் அடங்கிய கருப்பு பதாகைகளுடன் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும்படி மக்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த போராட்டத்தின் போது மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story