கொரோனா தாக்கம் எதிரொலி: கோவை மாவட்டத்தில் பத்திரப்பதிவு 30 சதவீதமாக குறைந்தது


கொரோனா தாக்கம் எதிரொலி:  கோவை மாவட்டத்தில் பத்திரப்பதிவு 30 சதவீதமாக குறைந்தது
x
தினத்தந்தி 21 May 2020 5:19 AM IST (Updated: 21 May 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு காரணமாக கோவை மாவட்டத்தில் பத்திரப்பதிவு 30 சதவீதமாக குறைந்தது.

கோவை,

கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய துறைகளை தவிர மற்ற அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. அதன்படி பத்திரப்பதிவு துறை அலுவலகங்களும் மூடப்பட்டன. கொரோனா தாக்கம் குறைந்ததும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பத்திரப்பதிவு எதிர்பார்த்த அளவிற்கு நடைபெறாததால் அலுவலகங்கள் மீண்டும் மூடப்பட்டன.

இந்த நிலையில், கடந்த 18-ந் தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. கோவை மாவட்டத்தில் மொத்தம் 17 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. கொரோனா தாக்கத்திற்கு முன்பு கோவை மாவட்டத்தில் தினமும் சுமார் ஆயிரம் கிரய பத்திரங்கள் பதிவாகும். ஆனால் தற்போது அதில் மூன்றில் ஒரு பங்கு சுமார் 30 சதவீத அளவுக்குதான் பதிவாகின்றன. கடந்த 18-ந் தேதி கோவை மாவட்டத்தில் மொத்தம் 381 பத்திரங்கள் பதிவாயின. அன்று அதிகபட்சமாக சூலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 41 பத்திரங்கள் பதியப்பட்டன.

ஒரே நாளில் 400 பத்திரங்கள்

நேற்று பிரதோஷம் என்பதால் ஒரே நாளில் சுமார் 400 பத்திரங்கள் பதிவானதாக கூறப்படுகிறது. கடந்த 18-ந் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 871 பத்திரங்கள் பதிவாகி அவற்றின் மூலம் சுமார் ரூ. 4 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து பத்திரப்பதிவுத் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறை தான் அரசுக்கு இரண்டாவதாக அதிக வருமானம் கொடுக்கும் துறை ஆகும். ஆனால் கொரோனா தாக்கத்தினால் கோவை மாவட்டத்தில் பத்திரப்பதிவு 30 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் பொது போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. அது தொடங்கி மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்தால் தான் பத்திரங்கள் அதிக எண்ணிக்கையில் கிரயம் ஆகும்.

அடமான பத்திரங்கள்

தற்போது பதிவாகும் பத்திரங்களில் 50 சதவீத பத்திரங்கள் அடமானம் வைப்பதற்காக பதியப்படுகின்றன. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் ஏற்கனவே வாங்கிய சொத்து பத்திரங்களை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்குகிறார்கள். அவ்வாறு கடன் வாங்குவதற்கும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story