தென்மேற்கு பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை


தென்மேற்கு பருவமழை :  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 21 May 2020 5:48 AM IST (Updated: 21 May 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

கோவை,

தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத் தலைமை தாங்கி பேசியதாவது:-

தென்மேற்கு பருவமழையையொட்டி பலத்த மழை பெய்யும்போது கோவையில் உள்ள பாலங்களில் தண்ணீர் தேங்கி நின்றால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துவதற்காக மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைநீர் வடிகால்களில் அடைப்புகள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளையும், கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளையும் தீவிரமாக தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும்.

சாலைகள் பழுதில்லாமல் பராமரிக்கவும், மழையின் காரணமாக மரங்கள் சாலைகளில் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வீடுகளில் பராமரிக்கவும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைப்பதற்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிப்புடன் பணி மேற்கொள்ள வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள் நோய் தடுப்பு பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளாக சமூக இடைவெளியையும், முகக்கவசம் அணிவதையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் துணை ஆணையாளர் பிரசன்ன ராமசாமி மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story