டிராக்டரில் ஏற்றி வந்து தக்காளியை ஆற்றில் கொட்டிய விவசாயிகள்
சூளகிரி அருகே உரிய விலை கிடைக்காததால் விரக்தி அடைந்த விவசாயிகள் தக்காளியை டிராக்டரில் ஏற்றி வந்து ஆற்றில் கொட்டி சென்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் சூளகிரியில் உள்ள மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு லாரிகள் மூலம் சேலம், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும், கர்நாடகம், ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை சந்தைகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து தொழில்களும் முடங்கின. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை மார்க்கெட் மற்றும் சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
இதனால் ஓசூர், சூளகிரி பகுதிகளில் காய்கறிகள், பழ வகைகள் மற்றும் பறிக்கப்படாமல் தோட்டங்களில் காய்ந்து அழுகி வருகிறது. மேலும் உரிய விலை கிடைக்காததால் குடைமிளகாய் மற்றும் காய்கறிகள் ஆடு, மாடுகளுக்கு தீவனமாகவும், சாலைகளில் கொட்டப்படும் அவல நிலையும் ஏற்பட்டது.
இந்தநிலையில் சூளகிரி அருகே கீரனபள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி பயிரிட்டிருந்த விவசாயிகள் உரிய விலை கிடைக்காததால் அவற்றை நேற்று டிராக்டரில் ஏற்றி வந்து, அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கொட்டி சென்றனர். பல விவசாயிகள் ஆடு, மாடுகளை விட்டு மேய்த்து வருகின்றனர். மேலும் பலர் தக்காளியை தோட்டத்திலேயே பறிக்காமல் விட்டு விட்டனர். இதனால் தக்காளி செடியிலேயே அழுகி வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சூளகிரி பகுதியில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்து மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இங்கு வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வாகன வசதி மற்றும் சந்தை இல்லாததால் அவற்றை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
தற்போது 30 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.30 முதல் ரூ.40-க்கு விற்பனையாகிறது. இதனால் எங்களுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செலவு கூட கிடைப்பதில்லை. இதனால் தான் ஆற்றில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story