கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 19 ஏரிகள் தூர்வாரும் பணி; கலெக்டர் ஆய்வு


கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 19 ஏரிகள் தூர்வாரும் பணி; கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 May 2020 12:53 AM GMT (Updated: 21 May 2020 12:53 AM GMT)

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 19 ஏரிகள் ரூ.1 கோடியே 56 லட்சத்து 870 மதிப்பில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் கங்கலேரி ஊராட்சி ராமர்கொட்டாய் கீழ் குட்டை ஏரி, மலைசந்து ஏரி உள்ளிட்ட 19 ஏரிகளின் கரைகளை பலப்படுத்துதல், ஆழப்படுத்துதல், நீர் வெளியேறுவதற்கான தடுப்புகள் அமைத்தல் மற்றும் தூர்வாரும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா மகேஷ்வரி, பானுபிரியா, உதவி பொறியாளர் தமிழ்செல்வி, இளநிலை பொறியாளர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன், ஊராட்சி செயலாளர் சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

குடிமராமத்து திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 2020-2021-ம் நிதியாண்டில் 19 ஏரிகள் ரூ.1 கோடியே 56 லட்சத்து 870 மதிப்பில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கங்கலேரி ஊராட்சி ராமர் கொட்டாய் கீழ் குட்டை ஏரி, மலைசந்து ஏரி, இந்திரா குட்டை ஏரி, ஏரி கொல்லி ஏரி, அகரம் ஏரியும், பெல்லம்பள்ளி ஊராட்சி திம்மப்பன் ஏரி தூர்வாரப்படுகிறது.

இதேபோல சிக்கபூவத்தி ஊராட்சி லிங்கன்குட்டை ஏரி, ஜிஞ்சுபள்ளி ஊராட்சி பந்தாரப்பள்ளி ஏரி, செம்படமுத்தூர் ஊராட்சியில் தோனிகுட்டை ஏரி, கோட்டகுண்டு குட்டை ஆகிய ஏரிகள் தூர்வாரப்படுகிறது. மேல்மாந்தோப்பு ஏரி, பச்சிகானப்பள்ளி ஊராட்சியில் பையனப்பள்ளி ஏரி, மேகலசின்னம்பள்ளி ஊராட்சியில் அப்புகுட்டை ஏரி, பூக்காரன் குட்டை ஏரி, மாலிநாயனப்பள்ளி ஊராட்சியில் ஜம்பு ஏரி தூர்வாரப்படுகிறது.

மேலும் கல்லுகுறுக்கி ஊராட்சியில் முனியப்பன் குட்டை ஏரி, வெங்கடாபுரம் ஊராட்சியில் நொச்சி குட்டை ஏரி, பெரிய கோட்டப்பள்ளி ஊராட்சியில் ஜெட்டேரி ஏரி, குருபு குட்டை ஏரி என மொத்தம் 19 ஏரிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story