சீர்காழி பகுதியில் குறுவை சாகுபடி பணி தீவிரம் தடையின்றி மின்சாரம் வினியோகிக்க கோரிக்கை


சீர்காழி பகுதியில் குறுவை சாகுபடி பணி தீவிரம் தடையின்றி மின்சாரம் வினியோகிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 May 2020 1:06 AM GMT (Updated: 21 May 2020 1:06 AM GMT)

சீர்காழி பகுதியில் குறுவை சாகுபடி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை மேற்கொள்ள தடையின்றி மின்சாரம் வினியோகிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி, 

சீர்காழி பகுதியில் குறுவை சாகுபடி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை மேற்கொள்ள தடையின்றி மின்சாரம் வினியோகிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுவை சாகுபடி

சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட சீர்காழி, செம்மங்குடி, திட்டை, தில்லைவிடங்கன், கடவாசல், எடக்குடி வடபாதி, காரைமேடு, வைத்தீஸ்வரன்கோவில், கற்கோவில், தொழுதூர், திருப்புன்கூர், பெருமங்கலம், ஆதமங்கலம், கதிராமங்கலம், மருதங்குடி, ஆலஞ்சேரி, கொண்டல், புங்கனூர், வள்ளுவகுடி, நிம்மேலி, அகணி, விழுந்திடசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காணப்படுவதால் பம்புசெட் மூலம் இரைக்கப்படும் குறைவான தண்ணீரை கொண்டு குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குறைவான தண்ணீரும் நடவு பணிக்கு கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தடையின்றி மின்சாரம்

சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது பெரும்பாலான விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறுவை சாகுபடி பணி பம்புசெட் மூலம் நடைபெற்று வருகிறது. ஆனால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பணி பாதிக்கப்படுகிறது. எனவே, குறுவை சாகுபடி பணியை மேற்கொள்ள தடையின்றி மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா ஊரடங்கில் தற்போது தளர்வு செய்யப்பட்டுள்ளதால் வெளியூர்களுக்கு சென்று விவசாய தொழிலாளர்கள் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை இல்லாமல், விவசாய பணி தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழக அரசு வருகிற ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவித்துள்ளது குறுவை சாகுபடி செய்யும் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story